முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிரட்ட முடியாது என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும்: ராகுல் காந்தி பேச்சு

திருச்சி: திருச்சி துறையூரில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி; “பாஜகவின் முகமூடியாக அதிமுக செயல்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டுகளை காரணம் காட்டி கூட்டணிக் கட்சிகளை மிரட்டி பணிய வைத்துள்ளது பாஜக.

அதிமுக அமைச்சர்கள் தங்களது ஊழல் குற்றச்சாட்டுகளை மறைக்க பாஜகவிடம் சரணடைந்துள்ளார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மிரட்ட முடியாது என்பது பாஜகவுக்கு நன்றாக தெரியும். கொள்கைகளில் சமரசம் செய்யாதவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மகளிர் இட ஒதுக்கீடு என்ற பெயரில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க பாஜக சதி செய்கிறது.

பாஜகவின் சதியை நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முறியடித்துள்ளன. தமிழ்நாட்டின் வரலாறு, சமூகநீதி பாஜகவுக்கு எரிச்சலாக உள்ளது. ஜாதி மற்றும் மதம் ரீதியாக மக்களை பிரிக்க பாஜக முயற்சி செய்து வருகிறது. தமிழ்நாட்டின் சமூக நீதியை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமைப்பட வேண்டும். தமிழ்நாட்டின் சமூக நீதி ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சொல்லப்பட வேண்டும்.

பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டிரம்ப் கட்டுப்படுத்துகிறார். டிரம்ப் குதி என்றால் மோடி குதித்து விடுவார். எஃப்ஸ்டீன் கோப்புகளை காட்டி பிரதமர் மோடியை அமெரிக்கா மிரட்டுகிறது. மோடி மற்றும் அதானிக்கு இடையேயான வர்த்தக தொடர்பு குறித்தும் அமெரிக்காவுக்கு தெரியும்” எனவும் ராகுல் காந்தி பேசினார்.

Related Stories: