இத்தாலி பிரதமர் மெலோனிக்கு தைரியம் இருப்பதாக நினைத்தேன், ஆனால் தப்பு கணக்கு போட்டுவிட்டேன் என போப் லியோவுக்கு ஆதரவாகவும், இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த மெலோனியை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
அமெரிக்க – ஈரான் இடையேயான போர் 47-வது நாளை எட்டியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து “ஆபரேஷன் எபிக் பியூரி” என்ற பெயரில் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கின. அணுசக்தி நிலையங்கள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 38 முதல் 40 நாட்கள் வரை மிகக் கடுமையான போராக நீடித்தது. பாகிஸ்தானின் முயற்சியால் ஏப்ரல் 8 அன்று இரு தரப்பிற்கும் இடையே 2 வார கால தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது.
ஈரான் விவகாரத்தில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை போப் லியோ விமர்சித்தார். இதற்குப் பதிலடியாக, ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் போப்பை “குற்றங்களுக்கு எதிராக மென்மையானவர்” என்றும், “வெளியுறவுக் கொள்கையில் மோசமானவர்” என்றும் கடுமையாகச் சாடினார்.
ட்ரம்பின் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது என இத்தாலி பிரதமர் மெலோனி வெளிப்படையாகக் கண்டித்தார். அமைதிக்காகக் குரல் கொடுப்பது கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப்பின் கடமை. அரசியல் தலைவர்கள் சொல்வதை மதத் தலைவர்கள் கேட்க வேண்டும் என்ற நிலையைத் தான் விரும்பவில்லை என்றும், போப்பிற்குத் தனது முழு ஆதரவையும் தெரிவிப்பதாகவும் மெலோனி கூறினார். மேலும் இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இத்தாலி தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளார்.
இந்த நிலையில், இத்தாலி பிரதமர் மெலோனிக்கு தைரியம் இருப்பதாக நினைத்தேன், ஆனால் தப்பு கணக்கு போட்டுவிட்டேன். ஈரான் போரில் எங்களுடன் இணைய மெலோனி மறுத்துவிட்டார். ஈரான் அணு ஆயுதம் வைத்திருந்தால் 2 நிமிடத்தில் இத்தாலி அழிந்துவிடும், அதைப் பற்றி மெலோனிக்குக் கவலையில்லை என கடுமையாக விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த இத்தாலி பிரதமர், அமெரிக்காவை போல யாரும் அணுஆயுத அச்சுறுத்தல்களைத் தூக்கி வீசுவதில்லை. நீங்கள் அமெரிக்காவின் ஜனாதிபதி மட்டுமே; இத்தாலியின் தலைவர் அல்ல என கூறியுள்ளார்.
