சென்னை: இனிகோ இருதயராஜ் சகோதரி, காதர் மொகிதீன் மகன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும், கிறித்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவருமான இனிகோ இருதயராஜின் சகோதரி எஸ்.ஆஞ்சலோ ஆரோக்கியமேரி மறைந்த செய்தியறிந்து, இனிகோ இருதயராஜை தொலைபேசியில் தொடர்புகொண்டு, என்னுடைய வேதனையை பகிர்ந்துகொண்டேன்.
உடன்பிறந்த சகோதரியின் மறைவால் வாடும் இனிகோ இருதயராஜ்க்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு இரங்கல் செய்தி: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீனின் மகனும், அறிவியலாளருமான கே.எம்.கே. கலீலூர் ரஹ்மான் மறைவு செய்தியறிந்து பெரிதும் வருந்தினேன்.
பெற்றெடுத்து பேரன்பு செலுத்தி வளர்த்து, ஆன்றோர் அவையில் பெரும்புகழ் எய்திடக் கண்ட மகன் மண்ணுலகைவிட்டு பிரிந்த துயர் தாளாது வேதனையில் வாடும் காதர் மொகிதீனை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டேன்.
மு.க.ஸ்டாலினின் மற்றொரு இரங்கல் செய்தியில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நான் பணியாற்றியபோது, எனது உதவியாளராகப் பணியாற்றிய ஆதிசேசனின் தாயார் சொர்ணம்மாள் மறைந்த செய்தியறிந்து பெரிதும் வருத்தமுற்றேன். பெற்ற அன்னையை இழந்து வாடும் ஆதிசேசனுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
