சென்னை: தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை படிப்புகளுக்கான மொத்த இடங்களில், சுமார் 70.20 சதவீத இடங்கள் தற்போது வரை நிரம்பியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநரகத்தின் கீழ் உள்ள 181 அரசு கலை-அறிவியல் கல்லூரிகளிலும் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த அரசு கலை – அறிவியல் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,28,667 இடங்களில் (இதில் நடப்பாண்டில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1,708 இடங்களும் அடங்கும்), தற்போது வரை 90,334 (70.20%) இடங்கள் நிரம்பி உள்ளதாக கல்வி இயக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிமார் 29.8% (38,333 இடங்கள்) இன்னும் நிரப்பப்படாமல் காலியாக இருக்கின்றன. அரசு கலை கல்லூரிகளில் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளின் சேர்க்கையே அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போது வரை நிரம்பியுள்ள 90,334 இடங்களில் மாணவிகள் 53,096 பேர், மாணவர்கள் 36,812 பேர், திருநங்கைகள் 25 பேர் அடங்குவர்.
சென்னை மாநிலக் கல்லூரி, கோவை அரசு கலைக் கல்லூரி, மற்றும் நந்தனம் அரசு கலைக் கல்லூரி போன்ற முன்னணி நகர்ப்புற கல்லூரிகளில் 90%-க்கும் அதிகமான இடங்கள் ஏற்கனவே நிரம்பிவிட்டன. ஆனால் மாவட்ட எல்லைகளில் உள்ள மற்றும் கிராமப்புற அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மந்தமாக உள்ளதால், அங்கு தான் பெரும்பாலான இடங்கள் காலியாக உள்ளன. மாணவர் சேர்க்கை மந்தமாக இருக்க மாணவர்கள் பலரும் பொறியியல் மற்றும் இதர தொழில்முறை படிப்புகளை நோக்கி செல்வதும், அரசு கல்லூரிகளின் கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே, தனியார் சுயநிதி கல்லூரிகள் சேர்க்கையை முடித்துவிடுவதும் காரணமாக கூறப்படுகிறது.
