பாங்காக்: தாய்லாந்தில் இந்தியர்கள் 3 பேரை கடத்தி, சித்ரவதை செய்து, பணம் கேட்டு மிரட்டிய 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தியாவை சேர்ந்த மோஹித்(23), ஆஷிஷ்(24) மற்றும் ஹிமான்ஷூ(20) ஆகிய 3 பேரும் குறைந்த செலவில் 7 நாள்கள் சுற்றுலா என்ற விளம்பரத்தை பார்த்து தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு சென்று சேர்ந்ததும், மர்ம நபர்கள் சிலர் 3 பேரையும் பட்டாயா நகருக்கு அழைத்து சென்று, ஒரு வீட்டில் அடைத்து வைத்ததுடன், கை, கால்களை கட்டி போட்டு சித்ரவதை செய்துள்ளனர்.
பின்னர் 3 பேரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், மூவரையும் விடுவிக்க வேண்டுமெனில் ரூ.40 லட்சம் பணம் தர வேண்டும் என கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து 3 பேரின் குடும்பத்தினர் தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து இந்திய தூதரகம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து இளைஞர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. அதன்படி, 3 பேரின் குடும்பத்தினருக்கு கடத்தல்காரர்கள் அனுப்பிய வீடியோவை ஆய்வு செய்தனர்.
அதில், 3 இளைஞர்களும் கை, கால்கள் கட்டப்பட்டிருந்தது. அவர்களின் உடல்களில் கட்டையால் தாக்கிய காயங்களும் இருந்தன. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்த காவல் துறையினர் கடத்தல்காரர்கள் பாங்காக்கில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி இருப்பதை கண்டுபிடித்து, அங்கு சென்று மர்ம நபர்கள் 5 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், “கடத்தலில் ஈடுபட்டவர்கள் அவ்தார் சிங், ஜக்ஜித் சிங், ராம்பால குமார், சுக்பீர் சிங் மற்றும் குல்ரா சிங் ஆகிய இந்தியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுற்றுலா பயணிகளான 3 இந்தியர்களை கடத்துமாறு சேட் என்ற செயலி மூலம் அறிமுகமான பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் தங்களுக்கு உத்தரவிட்டார். மேலும், இந்த கடத்தலில் தொடர்புடைய முக்கிய நபர் துபாயில் வசிப்பதாக கருதப்படுகிறது. அவர் 3 இந்தியர்களை மீட்க தரப்படும் பணத்தை கிரிப்டோ கரன்சி மூலம் பெற திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.
