கர்நாடகாவின் நீர் நிலைகளை பார்வையிட தமிழக முதல்வர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளேன்: கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமார்

டெல்லி: காவிரி விவகாரத்தில் தொலைபேசி மூலம் தமிழக முதல்வர் விஜய் என்னிடம் பேசினார். கர்நாடகாவின் நீர் நிலைகளைப் பார்வையிட தமிழக முதல்வருக்குக் கோரிக்கை வைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். இது குறித்து டெல்லியில் கர்நாடக  முதல்வர் சிவகுமார் பேட்டி அளித்துள்ளார். காவிரியில் இருந்து சிறிதளவு தண்ணீர் திறந்துவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே அவர்களின் கோரிக்கை இருமுறை நிராகரிக்கப்பட்டிருந்தது.

எனவே, தற்போதைய உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் நான் ஆலோசனை நடத்தியுள்ளேன். நாங்கள் மேல்முறையீடு செய்யவுள்ளோம்; அதன்பிறகு ஒரு முடிவை எடுப்போம். பெங்களூரு சென்ற பிறகு, எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் இது குறித்துப் பேசுவேன். இதற்கிடையில், சில விஷயங்கள் குறித்து என்னிடம் நேரில் வந்து பேசத் தமிழகம் தரப்பிலும் விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளரும் எனக்குக் கடிதம் எழுதியுள்ளார்; தொலைபேசியிலும் என்னிடம் பேசியுள்ளனர். அவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களுக்குச் சேர வேண்டியதை வழங்குவதும் எங்கள் கடமை. சரி, வாருங்கள் என்று நான் அவர்களிடம் கூறியுள்ளேன். காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையைத் தீர்க்க தமிழக முதல்வர் விருப்பம் தெரிவித்துள்ளார். மேகதாது பகுதி உள்ளிட்ட கர்நாடகாவின் நீர் நிலைகளைப் பார்வையிட தமிழக முதல்வருக்காக ஹெலிகாப்டரைத் தயார் நிலையில் வைத்துள்ளோம்; அவருக்கு விளக்கமளிக்க வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவும் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Related Stories: