டோக்கியோ: ஜப்பானின் கியூஷு தீவில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் சனே தகாய்ச்சி தெரிவித்துள்ளார். ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷு தீவின் குமாமோட்டோ பகுதியில், ேநற்று மாலை 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, இரண்டு மணி நேரத்திற்குள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், பல இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தும், தீப்பிடித்தும் பெரும் சேதம் ஏற்பட்டது. இதில் காஷிமா நகரில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலின் இரண்டாவது தளம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உள்ளே சிக்கிக்கொண்டனர்.
இச்சம்பவம் குறித்து ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். எனது தலைமையிலேயே அவசரகால பேரிடர் மேலாண்மை தலைமையகம் அமைக்கப்பட்டு, மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன’ என்றார்.
