டோக்கியோ: ஜப்பானில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் வணிக வளாகம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஜப்பானில் உள்ள கியூஷு தீவில் உள்ள குமாமோட்டோவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகியது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கியூஷு தீவின் மிகப் பெரிய நகரான குமாமோட்டோவுக்கு தெற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகள் சேதமடைந்தன. ஒரு வணிக வளாகத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்துக்குப் பிறகு ஏற்பட்ட வெடிவிபத்தால் வணிக வளாகத்துக்குள் பலர் சிக்கிக்கொண்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் மக்கள் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் கூறியதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
