சமீபகாலமாக செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. மருத்துவம் முதல் விண்வெளி வரை AI யின் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால், இதே AI மனிதகுலத்திற்கே மிகப் பெரிய ஆபத்தாக மாறக்கூடும் என்று பல ஆண்டுகளாக எச்சரித்து வருகிறார் தொழில்நுட்ப ஜாம்பவான் எலான் மஸ்க்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் AI யின் எதிர்காலம் குறித்து தெரிவித்த கருத்துகள் மீண்டும் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. எலான் மஸ்கின் கணிப்பின்படி, இன்னும் சுமார் ஐந்து ஆண்டுகளில் மனிதர்களின் மொத்த அறிவாற்றலைவிட AI யின் திறன் அதிகமாகும் நிலை உருவாகலாம். அதன் பின்னர், மனிதர்கள் செய்யும் பெரும்பாலான பணிகளை AI இன்னும் சிறப்பாகச் செய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மனிதர்கள் AI மீது தங்களுடைய கட்டுப்பாட்டை இழக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், AI என்பது அச்சுறுத்தல் மட்டுமல்ல; மனிதகுலத்திற்கு மிகப் பெரிய வாய்ப்புகளையும் உருவாக்கக்கூடிய தொழில்நுட்பம் என்றும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.
2036-க்குள் மனிதர்களைப் போன்ற உருவம் கொண்ட (Humanoid) ரோபோக்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கலாம் என்றும், அதிநவீன AI மற்றும் ரோபோக்களின் வளர்ச்சியால் உற்பத்தித் திறன் பல மடங்கு உயரும். இதன் மூலம் உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் கணித்துள்ளார்.
இருப்பினும், AI தவறான முறையில் பயன்படுத்தப்பட்டாலோ அல்லது போதுமான பாதுகாப்பு இல்லாமல் அதனை மேம்படுத்தினாலோ அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். எனவே, உலகின் முன்னணி நிறுவனங்கள் ஒன்றுக்கொன்று போட்டியிடுவது மட்டுமல்லாமல், AI பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொண்டு, புதிய AI மாதிரிகளை வெளியிடுவதற்கு முன்பு கடுமையான பாதுகாப்பு மதிப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எலான் மஸ்கின் இந்த கருத்துகள் உலகளவில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. AI மனிதகுலத்தின் மிகப் பெரிய சாதனையாக மாறுமா, அல்லது மனிதர்களுக்கே மிகப் பெரிய சவாலாக மாறுமா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
