அமைச்சர்களின் இலாக்கா ஒதுக்கீட்டில் நீடிக்கும் இழுபறி..!! புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி முடிவுக்கு வருமா?

புதுவை: அமைச்சர்களின் இலாக்கா ஒதுக்கீடு தொடர்பாக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுவதால், என்.ஆர். காங்கிரஸ்–பாஜக கூட்டணி முடிவுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதுச்சேரியில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இந்தக் கூட்டணியில், என்.ஆர். காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டரை மாதங்கள் ஆகியும், இதுவரை அமைச்சர்களுக்கு இலாக்காக்கள் ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்கு முன்பு, என்.ஆர். காங்கிரஸுக்கு அமைச்சரவையில் 3 இடங்களும், பாஜகவுக்கு 2 இடங்களும், மேலும் சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், முக்கிய இலாக்காக்களை ஒதுக்குவது தொடர்பாக பாஜக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் இடையே இதுவரை இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கீடு பட்டியலை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை சந்தித்து முதலமைச்சர் ரங்கசாமி வழங்கியிருந்தார். ஆனால், அந்தப் பட்டியல் வழங்கப்பட்டு ஒன்பது நாட்கள் ஆகியும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இது அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

முதலமைச்சர் ரங்கசாமி, பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு ஒதுக்கிய இலாக்காக்கள் அக்கட்சிக்கு திருப்தி அளிக்காததே அறிவிப்பு தாமதமாகியதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, அமைச்சர்களுக்கான இலாக்கா ஒதுக்கீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி, “எந்த நேரத்தில் கணக்கு தீர்க்க வேண்டுமோ, அந்த நேரத்தில் கணக்கு தீர்ப்பேன்” என்று மட்டும் கூறிவிட்டு சென்றார்.

இந்தச் சம்பவங்களின் பின்னணியில், பாஜக–என்.ஆர். காங்கிரஸ் உறவில் சிக்கல் நிலவுவதாகவும், இதனால் கூட்டணியே முறியும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: