திமுக ஆட்சியில் ரூ.7.50 கோடியில் கட்டிய பொள்ளாச்சி புதிய பஸ் நிலையத்தில் இன்று முதல் பேருந்து சேவை துவக்கம்

*போக்குவரத்து நெரிசல் இருக்காது

*அதிகாரிகள் தகவல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சிடிசி மேட்டில், திமுக ஆட்சியில் ரூ.7.50 கோடியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, இன்று (29ம் தேதி) முதல் வெளியூர்களுக்கு பேருந்து சேவை துவங்கப்படுகிறது.

இந்நிலையில் இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரில் மத்திய பகுதியில் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையம் செயல்படுகிறது.

இந்த பேருந்து நிலையங்களில் இருந்து உள்ளூர் சுற்றுவட்டார பகுதி மட்டுமின்றி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், மதுரை, வால்பாறை, பழனி, திண்டுக்கல், மேட்டுப்பாளையம், ஊட்டி, கேரள மாநில பகுதி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் தென் மாவட்ட பகுதிகளுக்கும் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்த இரு பேருந்து நிலையங்களில் இருந்து, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் என தினமும் சுமார் 280க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுவதால், பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

அதிலும் வெளியூர்களுக்கு அதிகம் சென்று வரும் பேருந்துகளில் பயணம் செய்வதற்காக பழைய பேருந்து நிலையத்தில் அதிகாலை முதல் இரவு வரை பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். பொள்ளாச்சி நகரில் வாகன போக்குவரத்து மற்றும் பல்வேறு அரசு அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்கள் அருகே அமைந்துள்ள நிலையங்களில் தினமும் கூட்டம் அதிகரிப்பின் காரணமாக அந்த வழியாக கடந்து செல்லும் பாலக்காடு ரோட்டில் மட்டுமின்றி அதனை சார்ந்து செல்லும் ரோடுகளிலும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மட்டுமின்றி, பொது மக்களுக்கு இடையூறும் அதிகம் ஏற்படுகிறது.

இதையடுத்து நகரை தொட்டுள்ள கோவை ரோடு சிடிசி மேட்டில் நகராட்சிக்கு உட்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் சுமார் 3 ஆண்டுக்கு முன்பு, திமுக ஆட்சியில் ரூ.7.50 கோடியில் துவங்கப்பட்டது. இந்த புதிய பேருந்து நிலைய திறப்பு நிகழ்ச்சி சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

அதன் பின்னர் தேர்தல் என்பதால் சிடிசி மேடு புதிய நிலையத்தில் பேருந்து இயக்கம் இல்லாமல் இருந்தாலும், இந்த பேருந்து நிலையத்தை சுற்றிலும் பல்வேறு கலைநயத்துடன் ஓவியங்கள் வரையப்பட்டு பொலிவு ஏற்படுத்தும் பல்வேறு பணியும் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் பொள்ளாச்சி பகுதியில் உள்ள சுற்றுலா பகுதி ஓவியம், விவசாயிகளை போற்றும் வகையிலான கலை நயத்துடன் என ஓவியங்கள் ஏற்படுத்தப்பட்டது. தற்போது சிடிசி மேடு புதிய பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணி மற்றும் பேருந்து போக்குவரத்து வசதிக்கான அனைத்து ஏற்பாடும் தயார் படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்று (29ம் தேதி) முதல் சிடிசி மேடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து, பொள்ளாச்சி நகராட்சி மற்றும் போக்குவரத்து துறை சார்பில், பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று முதல் கட்டமாக, தாராபுரம், பல்லடம், திருப்பூர், சேலம், ஈரோடு மற்றும் நகர பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தாராபுரம், பல்லடம், திருப்பூர், சேலம் ஈரோடு மார்க்கமாக எந்தெந்த பேருந்துகள் செல்ல வேண்டும் என்பது குறித்து அட்டவணை இடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

சிடிசி மேட்டில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இன்று (29ம் தேதி) முதல் பேருந்துகள் இயக்கம் துவங்கப்படுவதால், இதற்கான ஏற்பாடுகளை நகராட்சி நிர்வாகத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். பொள்ளாச்சி நகரை தொட்டுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தால் பொள்ளாச்சி பகுதி மேலும் வளர்ச்சி அடையும் நிலை ஏற்படும் என தன்னார்வலர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர்.

Related Stories: