காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் டாஸ்மாக் கடைகளில் கள்ள நோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட டாஸ்மாக் நிர்வாக கட்டுபாட்டில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், பல்லாவரம், குன்றத்தூர், மணிமங்கலம், படப்பை மற்றும் சென்னையை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் 90 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில், மது பிரியர்கள் கிழிந்த நோட்டுகளை ஒட்டி வழங்கி வருகின்றனர்.
கேட்டால் டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி, அவர்கள் மதுபானம் வாங்கிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது டாஸ்மாக் கடைகளில் கள்ள நோட்டுகள் அதிகமாக புழக்கத்தில் வருவதாக தகவல் பரவி வருகிறது. அதற்கு உதாரணமாக காஞ்சிபுரம், வையாவூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் தினசரி கள்ள ரூபாய் நோட்டுகள் வருகின்றன. இதுவரை 3,300 கள்ள நோட்டுகள் வந்துள்ளன. இதில் 500, 200, 100 ரூபாய் கள்ள நோட்டுகள் தொடர்ச்சியாக புழக்கத்தில் வருவதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 500 ரூபாய் நோட்டுகள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்திலும், அவசரமாக வந்து மதுபானம் வாங்குவது போலவும் கள்ள நோட்டுகள் கைமாறப்படுகின்றன.
மது பிரியர்கள் மூலம் இந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் கொடுத்து அனுப்பப்படுகிறதா அல்லது மது பிரியர்கள் தங்களுக்கே தெரியாமல் டாஸ்மாக்களில் கொடுத்து மதுபானம் வாங்கி செல்கின்றனரா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட உதவி ஆணையர் (கலால்) மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இணைந்து கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டாஸ்மாக் விற்பனையாளர்களும், ஊழியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
