பந்தலூர், ஜூலை 29: பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடு உள்ளிட்ட கால்நடைகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சிக்குட்பட்ட சேரம்பாடி பஜார் மற்றும் சுங்கம், கோரஞ்சால், கோஸ்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் மாடு உள்ளிட்ட கால்நடைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சாலையின் நடுவே கால்நடைகள் நீண்ட நேரம் நிற்பதால் அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், இருசக்கர வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
சில நேரங்களில் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. சாலைகளில் நடந்து செல்லும் பொதுமக்கள், முதியவர்கள், பள்ளி மாணவர்கள் சுற்றித் திரியும் கால்நடைகளால் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, கால்நடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், கால்நடைகள் சாலையில் நடமாடாத வகையில் நிரந்தர தீர்வை ஏற்படுத்தவும் சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
