பனியன் தொழிலாளர்களுக்கான புதிய சம்பளம் அமல்படுத்துவது எப்போது?

*தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் மெத்தனம்

திருப்பூர் : திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான திருப்பூரில் உள்ள பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்களில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இங்குள்ள தொழிலாளர்களுக்கான சம்பளம் விலைவாசி உயர்வுக்கேற்ப பனியன் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு 4 ஆண்டுக்கு ஒருமுறை புதிய ஒப்பந்தமாகப் புதுப்பிக்கப்படுவது வழக்கமாகும்.

அந்த வகையில், கடந்த 2021ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சம்பள ஒப்பந்தம் 2025ம் ஆண்டுடன் முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பல கட்ட பேச்சுவார்த்தைகளின் முடிவில், கடந்த மார்ச் 17ம் தேதி புதிய 4 ஆண்டு கால சம்பள உயர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது.

இப்புதிய ஒப்பந்தத்தின்படி, முந்தைய ஒப்பந்த ஊதியத்தில் இருந்து முதலாம் ஆண்டுக்கு 18 சதவீத உயர்வும், அடுத்த 3 ஆண்டுக்குத் தலா 5 சதவீத உயர்வும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், பஞ்சப்படி உயர்வு மற்றும் இரவு நேரக் கூடுதல் பணிக்குத் தேநீர் பேட்டாவாக ரூ.60 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தைச் சட்டப்பூர்வமான முத்தரப்பு ஒப்பந்தமாக மாற்றுவதற்காகத் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் நகல் வழங்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் முத்தரப்பு ஒப்பந்தமாகப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.

இதனால், பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் புதிய சம்பள உயர்வை முழுமையாக அமல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதுடன், அதிகாரப்பூர்வமாக சம்பள உயர்வைப் பெறுவதில் தொழிலாளர்கள் இடையே பல்வேறு முரண்பாடுகளும் குழப்பங்களும் உருவாகியுள்ளன.

அதிகாரிகளிடம் பேசி முத்தரப்பு ஒப்பந்தத்தை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் சார்பில் ஏற்கெனவே உற்பத்தியாளர் சங்கங்களுக்குக் கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டது.

இருப்பினும், ஒப்பந்தம் எட்டப்பட்டுப் பல மாதங்கள் கடந்தும் இன்னும் முத்தரப்பு ஒப்பந்தமாக மாற்றப்படாமல் நிலுவையிலேயே உள்ளது. எனவே, தொழிலாளர் நலத்துறை உடனடியாகத் தலையிட்டு, பனியன் தொழிலாளர்களுக்கான புதிய சம்பள உயர்வை விரைவாக முத்தரப்பு ஒப்பந்தமாகப் பதிவு செய்து அமல்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

Related Stories: