*உருளை ரூ.240க்கு விற்பனை
அரூர் : மொரப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழையின்றி விவசாய நிலங்கள் காய்ந்து போனதால், கால்நடைகளுக்கான தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட வைக்கோல் உருகைள் ரூ.240க்கு விற்பனை செய்யப்பட்டது.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், நடப்பாண்டு எல்நீனோ பிரச்னையால் பருவமழை பொய்த்து போனதால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வறண்டு, விவசாய நிலங்கள், வீடுகளில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் தாழ்ந்து போனது.
இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு போதிய தீவனம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் குடிநீருக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.
வியாபாரிகள் தமிழக டெல்டா பகுதிகள் மற்றும் புதுச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின், வைக்கோலை மொத்தமாக வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு, வைக்கோல் உருளைகளை சில்லறை விற்பனையில் ஒரு கட்டு ரூ.240 முதல் ரூ.270 வரை விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு லாரிகளில் மொத்தமாக வாங்கி வந்து, விவசாயிகள் இருப்பு வைத்து, கால்நடைகளுக்கு வழங்கி வந்தனர். ஆனால், இந்த வருடம் மொத்தமாக வைக்கோல் வாங்க வழியில்லாத நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
