×

குண்டும், குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நட்டாத்தி -மீனாட்சிப்பட்டி ரோடு

*கல்லூரி மாணவர்கள், கிராம மக்கள் அவதி

ஏரல் : நட்டாத்தியில் இருந்து மீனாட்சிப்பட்டி செல்லும் ரோடு குண்டும், குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்று மாறி இருப்பதால் கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஏரல் அருகே உள்ள நட்டாத்தியில் இருந்து மீனாட்சிப்பட்டி வரை உள்ள தார் ரோட்டில் அதிகளவு போக்குவரத்து நடந்து வருகிறது.

பண்டாரவிளை, பண்ணைவிளை, நட்டாத்தி, சுப்பிரமணியபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து நெல்லைக்கு சென்று வருவதற்கு நட்டாத்தி வந்து இங்கிருந்து மீனாட்சிப்பட்டி, வாகைக்குளம் வழியாக நெல்லைக்கு செல்வது குறுக்குப்பாதை என்பதால் அதிகளவு மக்கள் இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் மீனாட்சிப்பட்டியில் உள்ள ஹோலிகிராஸ் பொறியியல் கல்லூரிக்கு சென்று வரும் கல்லூரி வாகனங்களும் இவ்வழியாகத்தான் சென்று வருகின்றன.

அப்பகுதியில் புதிய தனியார் தொழிற்சாலைகளும் அதிகளவு உருவாகி வருவதால் இந்த கம்பெனிகளுக்கும் சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் வந்து செல்கின்றன. இப்பகுதியில் ஏராளமான பேவர் பிளாக் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கும் இருப்பதால் கனரக லாரிகளும் வந்து செல்கின்றன.

இவ்வாறு போக்குவரத்திற்கு முக்கிய சாலையாக உள்ள நட்டாத்தி -மீனாட்சிப்பட்டி சாலை, கடந்த ஓராண்டிற்கு மேலாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி சென்று வருகின்றன.

மீனாட்சிப்பட்டி அருகேயுள்ள கல் குவாரிகளில் இருந்து கல், எம்சாண்ட் மண், குண்டு கற்கள் ஏற்றி சாயர்புரம், தூத்துக்குடிக்கு செல்லும் லாரிகளும் இந்த பாதையில் சென்று வருவதால் இந்த சாலை மேலும் சிதைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது.

இச்சாலையில் மின்விளக்கு வசதியும் இல்லாததால் இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று வருவபர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நட்டாத்தியில் இருந்து மீனாட்சிப்பட்டி வரையிலான ரோட்டை சீரமைக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவ- மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நட்டாத்தியை சேர்ந்த காளிதாஸ் பண்ணையார் கூறுகையில் நட்டாத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் நெல்லைக்கு செல்ல வேண்டும் என்றால் பெருங்குளம் சென்று அங்கிருந்து சிவகளை, வை. வழியாக செல்ல வேண்டும்.

இல்லையேனில் அப்பகுதியில் இருந்து சாயர்புரம் சென்று நெல்லைக்கு செல்ல வேண்டும். நட்டாத்தி -மீனாட்சிப்பட்டி ரோடு நன்றாக இருந்தால் இவ்வழியாக சென்று வாகைக்குளம் வழியாக மிகக் குறைந்த தூரத்தில் சென்று வருவதற்கு வசதியாக இருக்கும்.

இப்பாதையில் கனரக வாகனங்கள் அதிகளவு வந்து செல்வதால் குண்டும், குழியுமாக மாறியுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை இருவழிச்சாலையாக தரம் உயர்த்தி அமைக்க வேண்டும் என்றார்.

Tags : Nattathi- ,Meenakshipatti ,Eral ,Nattathi ,Eral… ,
× RELATED பொள்ளாச்சி அருகே மக்கள் எதிர்ப்பை மீறி கோமங்கலம் சுங்கச்சாவடி திறப்பு