சென்னை: தாம்பரத்தில் ஓடும் ரயிலில் காவல்துறை பெண் அதிகாரியிடம் செல்போன் பறிக்கப்பட்டது. செல்போன் பறித்த வடமாநில இளைஞரின் மனைவி தற்கொலை மிரட்டலும் விடுத்திருக்கிறார். ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண் அதிகாரி படுகாயமடைந்தார்.
தென்காசி பகுதியைச் சேர்ந்த அடலின் பிரபா (25), சென்னை லைட் ஹவுஸ் பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி, மயிலாப்பூரில் உள்ள காவல்துறை அறிவியல் அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். நேற்று தாம்பரத்திலிருந்து கடற்கரை செல்லும் மின்சார ரயிலில் அவர் பயணம் செய்துள்ளார். அப்போது, ரயில் தாம்பரம் சானிடோரியம் ரயில் நிலையத்தில் நின்றபோது, ஜன்னல் வழியாக வடமாநில வாலிபர் ஒருவர் அவரிடமிருந்து செல்போனைப் பறித்துள்ளார்.
ரயில் உடனடியாகப் புறப்பட்டபோது அந்த வாலிபர் செல்போனைப் பறித்துள்ளார். உடனே அந்தப் பெண், திருடனைப் பிடிப்பதற்காக ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் பலத்த காயமடைந்தார். உடனடியாக அங்கு இருந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், செல்போன் திருட்டில் ஈடுபட்ட நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, முகத்திலும் தலையிலும் பலத்த காயமடைந்த பெண் அதிகாரி, சிகிச்சைக்காகத் தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பிடிபட்ட வடமாநில வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, அவர் கஞ்சா போதையில், தான் தன்னுடைய மனைவியின் செல்போனைத்தான் எடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அங்கு வந்த அவருடைய மனைவியும், அங்கிருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தன்னுடைய கணவரை உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
