தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாலியல் பலாத்காரம் செய்து மூதாட்டி அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்தவர் காளியப்பன் மனைவி முத்துலட்சுமி (65). இவரது கணவர் பிரிந்து சென்று விட்டதால், மகள் சத்யாவுடன் தனியாக வசித்து வந்தார். இவர் தெருக்களில் கிடைக்கும் பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார். கடந்த 15ம் தேதி சத்யா வெளியூருக்கு சென்றிருந்தார். இதனால் முத்துலட்சுமி வீட்டின் வெளியில் திண்ணையில் படுத்து தூங்கி உள்ளார்.
மறுநாள் காலை அக்கம் பக்கத்தினர் பார்த்த போது, முத்துலட்சுமி தலையில் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். உடனடியாக அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சத்யா அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் முத்துலட்சுமியை அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘‘கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியை சேர்ந்தவர் இன்னசன்ட் ரீகன் (37). திருமணமான இவர் மனைவியை பிரிந்து தூத்துக்குடியில் தங்கியிருந்து மீன் பிடிக்கும் வேலைக்கு சென்று வந்தார். இவர் மீது கன்னியாகுமரியில் உள்ள போலீஸ் நிலையத்தில் திருட்டு, அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சம்பவம் நடந்த அன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நிறுத்தப்பட்டிருந்த புதுக்கோட்டையை சேர்ந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு ஊர் சுற்றியுள்ளார். இந்திராநகர் பகுதியில் தனியாக படுத்திருந்த முத்துலட்சுமியை நோட்டம் விட்டு பணம் பறிக்கும் நோக்கத்தில் அருகில் சென்றுள்ளார்.
அப்போது சுத்தியலால் தலையில் ஓங்கி அடிக்கவே மூதாட்டி மயங்கினார். பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்திரமடைந்த ரீகன் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பி ஓடிவிட்டார். இது அருகேயுள்ள சிசிடிவி காட்சி மூலம் உறுதியாகி உள்ளது. இதையடுத்து கன்னியாகுமரியில் பதுங்கியிருந்த இன்னசன்ட் ரீகன் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என்றனர்.
