மாணவிகளிடம் பாலியல் சீண்டல் தலைமை ஆசிரியர், ஆசிரியர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தாலுகா வேடந்தவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவிகளிடம் பாலியல் சீண்டல் மற்றும் தவறான தொடுதலில் ஆசிரியர்கள் தொடர்ந்து ஈடுபடுவதாக பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கான உதவி எண்ணில் சமீபத்தில் புகார் வந்தது. அதைத்தொடர்ந்து, துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலர் தில்லைநாயகி, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர், அவரது அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு சிறார் காவல் பிரிவு சமூக பணியாளர் அசோக் மற்றும் சைல்ட் ஹெல்ப் லைன் மேற்பார்வையாளர் தீபிகா ஆகியோர் அந்த பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.  அப்போது, 4 மற்றும் 5ம் வகுப்பு மாணவிகள் 13 பேரிடம் தனித்தனியே விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், பள்ளி தலைமை ஆசிரியர் ரவி மற்றும் ஆசிரியர் முரளிதரன் ஆகியோர், தங்களிடம் தவறான தொடுதலில் ஈடுபடுவதாகவும், பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரின் பெயரை குறிப்பிட்டு மாணவிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதைத்தொடர்ந்து, துரிஞ்சாபுரம் வட்டார கல்வி அலுவலர் தில்லைநாயகி, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.அதன்பேரில், தலைமை ஆசிரியர் ரவி(58), இடைநிலை ஆசிரியர் முரளிதரன்(42) ஆகியோர் மீது போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: