ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே தூரிஞ்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(35), கட்டி தொழிலாளி. இவரது, மனைவி லட்சுமி(30). இவர்களுக்கு, 13 வயதில் மகன் உள்ளார். தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமி கணவரை பிரிந்துள்ளார். அதன்பின்னர், படவேடு அடுத்த ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த திருமணமாகாத பைக் மெக்கானிக் மதிவாணன்(30), என்பவருடன் லட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு, சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மதிவாணன் வெளியூர் சென்று வேலை செய்து வருகிறார். தற்போது, கர்ப்பிணியாக இருந்த லட்சுமிக்கு கடந்த 7ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் இருந்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு லட்சுமி குழந்தையுடன் வந்து ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில், கணவரும் வெளியூர் சென்றுள்ளதால், லட்சுமி குழந்தையை சரிவர பராமரிக்காமலும், பால் கொடுக்காமலும் இருந்துள்ளாராம்.
இதனால், தொடர்ந்து குழந்தை அழுது கொண்டே இருந்ததால், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர், அதேபகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ.500 கொடுத்து கமண்டல நாகநதி ஆற்றில் குழி தோண்டி புதைத்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த படவேடு விஏஓ ஜோதிமுருகன், சந்தவாசல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நடத்திய விசாரணையில், லட்சுமி தனது குழந்தையை கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் புதைத்தது தெரியவந்தது.
இந்நிலையில், லட்சுமிக்கு கடந்த 2 தினங்களாக காய்ச்சல் அதிகமானதால், அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தையின் சடலம் இன்று போளூர் தாசில்தார், போலீசார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்ய உள்ளனர். பிறந்த 15 நாளில் பெண் குழந்தையை பெற்ற தாயே கொலை செய்து புதைத்த சம்பவம் ஆரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
