*போலீசுக்கு பயந்து சிம்கார்டை மாற்றியது அம்பலம்
திருப்பத்தூர் : திருப்பத்தூரில் நடந்த விபத்தில் தம்பதி, குழந்தை சிசு பலியான வழக்கில் 4 மாதங்களாக திருப்பூரில் பதுங்கியிருந்த தொழிலாளி பிடிபட்டார். போலீஸ் விசாரணைக்கு பயந்து சிம்கார்டை மாற்றிவிட்டு டூவீலரை விற்றது தெரியவந்தது.
திருப்பத்தூர் அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் தினகரன் மகன் கவியரசன் (21). இவரது மனைவி அனிதா (21), கர்ப்பிணி. இவர்களது இரண்டவரை வயது பெண் குழந்தை சாய்ஸ்ரீ. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தம்பதி இருவரும் தங்கள் குழந்தையுடன் பைக்கில் திருப்பத்தூரில் இருந்து ஓசூர் நோக்கி சென்றனர்.
அப்போது திருப்பத்தூர் அடுத்த மட்றபள்ளி அருகே உள்ள ஆத்துமேடு பகுதியை சேர்ந்த பெங்களூருவில் கூலித்தொழில் செய்துவரும் சசிகுமார் (42) என்பவர் தனது பைக்கில் மகளுடன் திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது ஹவுசிங் போர்டு பகுதியில் உள்ள கிருஷ்ணகிரி மேம்பால பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற பேருந்தை முந்தி முயன்றதில் எதிரே வந்த கவியரசனின் பைக் மீது சசிகுமார் ஓட்டிவந்த பைக் மோதியது. இதில் இருதரப்பினரும் தூக்கிவீசப்பட்டனர். இந்த சம்பவத்தில் கவியரசனின் குழந்தை சாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தொடர்ந்து கவியரசன், அனிதா ஆகியோரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அனிதாவின் வயிற்றில் இருந்த 6 மாத சிசுவும் உயிரிழந்தது. கவியரசனுக்கு கால் உடைந்த நிலையில் தம்பதி இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். விபத்தில் தம்பதி, குழந்தை மற்றும் வயிற்றில் இருந்த சிசு என ஒட்டுமொத்த குடும்பமே இறந்த சம்பவம் அப்போது பெரும் சோகத்த ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான சசிகுமாரை தேடிவந்தனர். விபத்து நடந்த வாகனத்தை கர்நடகாவில் வேறு ஒருவருக்கு விற்கப்பட்டது ெதரிந்தது. சம்பவம் நடந்து சுமார் 4 மாதங்கள் ஆன நிலையில் சசிகுமாரை போலீசார் நேற்று கைது செய்து மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
முன்னதாக அவரை போலீசார் தேடிவருவதை அறிந்து திருப்பத்தூரில் இருந்து தப்பி திருப்பூரில் தனது குடும்பத்துடன் செட்டில் ஆனது தெரிந்தது. மேலும் அவர் பயன்படுத்தி வந்த சிம்கார்டை மட்டும் தனியாக எடுத்து அவ்வப்போது வெவ்வேறு தொலைபேசிகளில் பொருத்தி பேசி வந்துள்ளார். போலீசார் செல்போன் சிக்னலை ஆராய்ந்து திருப்பூர் சென்று அவரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
