* வீடியோ ஆதாரங்களை சமர்ப்பிப்பதாகவும் உத்தரவாதம்
திருமலை: பயிற்சி பெண் ஐபிஎஸ் அதிகாரியின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சஸ்பெண்ட் ஆன ஐபிஎஸ் அதிகாரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய காவல் அகாடமி உள்ளது. இங்கு பயிற்சி பெற்று வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு அட்டப்பூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரியான உதய்கிருஷ்ணாரெட்டி எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடு த்து ஆபாசமாக வீடியோ பதிவு செய்தார் என தெரிவித்துள்ளார்.
இப்புகாரின்பேரில் உதய்கிருஷ்ணாரெட்டி மீது போலீசார் கடந்த 19ம் தேதி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி, உதயகிருஷ்ணாரெட்டி ஆந்திர மாநில ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், பெண் ஐபிஎஸ் பயிற்சி அதிகாரியும், நானும் முசோரியில் பயிற்சி பெற்றபோது காதலித்தோம். உடல் ரீதியாகவும் நெருக்கமாக இருந்தோம். இது காவலர் பயிற்சி பள்ளியிலும் தொடர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பினோம்.
வருங்கால மனைவி என்பதால் அவருக்கு பொருளாதார ரீதியாக நிறைய உதவிகளை செய்தேன். ஆனால் அவர், நான் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக என்னை சந்தேகித்தார். திடீரென அவர், கடந்த மே மாதம் ஐஏஎஸ் அதிகாரியை திருமணம் செய்து கொண்டார். ஒருநாள் காவலர் பயிற்சி பள்ளியில் உள்ள என் அறைக்கு வந்தார். அப்போது என்னிடம் ‘உங்களுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இல்லை என்பதை புரிந்துகொண்டேன். உன்னை எனக்கு இன்னும் பிடித்திருக்கிறது’ என்றார்.
அவருக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிவிட்டதால், அவரை ஏற்க மறுத்துவிட்டேன். இருப்பினும் அவர், அடிக்கடி என் அறைக்கு வந்து கொண்டிருந்தார். இது அவரது கணவருக்கு தெரிந்தவுடன், நான்தான் அவரை துன்புறுத்துவதாக கூறியுள்ளார். இதனால் அவரது கணவர், என்னிடம் தகராறு செய்தார். அப்போது என் நேர்மையை நிரூபிக்க, காதலிக்கும்போது ஒன்றாக இருக்கும் ஒரு வீடியோவை அவருக்கு அனுப்பினேன்.
அதை பார்த்த பிறகு அவர், அவரது மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதற்கு பழி வாங்கும் விதமாக அவர், என் மீது காவல் பயிற்சி மைய இயக்குநரிடமும், போலீசிலும் பொய்யான புகார் அளித்துள்ளார். இதுதொடர்பான அனைத்து வீடியோ ஆதாரங்களையும் கோர்ட்டில் சமர்ப்பிக்கிறேன். எனவே என் மீது போடப்பட்ட எப்ஐஆர்ஐ ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.
