அரசியல் காரணங்களுக்காக யாரும் தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கக் கூடாது: நயினார் நாகேந்திரன்

சென்னை: அரசியல் காரணங்களுக்காக யாரும் தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கக் கூடாது என்று நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்

இதனை குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சமீபத்தில் வெளியான நிதி ஆயோக் திட்டக்குழு அறிக்கையில், தமிழகத்தின் விமான நிலையங்கள், கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட உட்கட்டமைப்புகளில் மாநில அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, தங்களது அரசியல் வேறுபாடுகளைக் கடந்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக தமிழகத்தின் வளர்ச்சியில் சமரசம் செய்யக் கூடாது.

காரணம், தமிழகத்தில் புதிதாக ஓர் விமான நிலையம் அமைவதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், விமான ஓடுதளம் அமைக்க பரந்தூர் ஏற்ற இடம் இல்லைஎன தவெகவின் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசியிருந்தார். ஆனால், பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டி தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்கவில்லை என மாண்புமிகு மத்திய விமானப் போக்குவரத்து துறை இணை அமைச்சர் முரளிதர் கிசான் மோஹோல் நாடாளுமன்றத்திலேயே தெளிவுபடுத்திவிட்டார்.

அப்படி இருக்கையில் அமைச்சர் நிர்மல்குமார் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்று கூறினார்? பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என்று கூறும் தவெக அரசு, இதுநாள் வரை மாற்று இடத்தை தேர்வு செய்யாதது ஏன்? தவெக அரசுக்கு பரந்தூரில் விமான நிலையம் அமைவது பிரச்சினையா அல்லது தமிழகத்திற்கு ஓர் புதிய விமான நிலையம் கிடைப்பதில் பிரச்சினையா? உட்பட பல கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றன.

எனவே, நிதி ஆயோக் அறிக்கையின் படி, தமிழகத்தின் விமானப் போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில், தமிழகத்தில் மேலும் ஓர் புதிய விமான நிலையம் அமைக்க தவெக அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

 

Related Stories: