நாம்ச்சி: சிக்கிம் மாநிலம் நாம்ச்சி மாவட்டத்தில் சமர்துங் பகுதியில் என்ற பகுதியில் கட்டப்பட்டு வரும் என்.எச்.பி.சி (NHPC) தீஸ்தா நிலை-VI நீர்மின் நிலைய சுரங்கத்தில் மீத்தேன் வாயு வெடித்த விபத்தில் தற்போது வரை 12 தொழிலாளர்கள் உயிரிழந்து உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமையன்று நடந்த இந்த விபத்தில் மேலும் 13 முதல் 15 தொழிலாளர்கள் வரை சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
டீஸ்டா ஸ்டேஜ்-VI (Teesta Stage-VI) நீர்மின் திட்டத்தின் கீழ் சாமர்துங் பகுதியில் படேல் இன்ஜினியரிங் நிறுவனம் இந்த சுரங்கப்பாதையை அமைத்து வந்தது. திங்கட்கிழமை மதியம் சுரங்கத்தின் உட்பகுதியில் ஏற்பட்ட மீத்தேன் வாயு கசிவு மற்றும் வெடிவிபத்து காரணமாக பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு சுரங்கப்பாதையின் நுழைவு வாயில் முற்றிலும் அடைபட்டது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்புப் படை மாநில பேரிடர் மீட்புப் படை மாவட்ட காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புப் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்ட போதிலும், சுரங்கப்பாதையின் உட்பகுதியில் இருந்து ஆபத்தான மீத்தேன் வாயு கசிந்தது மீட்புக் குழுவினருக்குப் பெரும் சவாலாக மாறியது. எனினும் தடைகளை தாண்டி மீட்புக்குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்படும் என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிதியுதவி வழங்கப்படும் என்றும் சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
