×

திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து ரூ.50 லட்சம் செம்மரக்கட்டை திருட்டில் வனத்துறைக்கு தொடர்பு: 2 காரில் வந்தவர்கள் யார்? விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள சந்தனமரக்கிடங்கில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 55 செம்மரக்கட்டைகள் திருட்டு போயுள்ளது. புகாரின்படி திருப்பத்தூர் டிஎஸ்பி முரளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அங்குள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 கார்களில் வந்த மர்ம நபர்கள் செம்மரக்கட்டைகளை கடத்திச்சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் 10 மாவட்டங்களில் இருந்து தலா 3 பேர் வீதம் 30 பேர் கொண்ட வனத்துறை அதிகாரிகள் நேற்று திருப்பத்தூருக்கு வந்தனர்.

அவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. திருப்பத்தூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அதிநவீன கேமராக்கள் உள்ள நிலையில், குறிப்பிட்ட 2 கேமராக்கள் கடந்த சில நாட்களாக பழுதாகி இருந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு பழுதான கேமராக்கள் உள்ள பகுதியில் நுழைந்துதான் செம்மரக்கட்டைகளை திருடியவர்கள் சிசிடிவி கேமராக்களை ஒட்டுமொத்தமாக ஆப் செய்துள்ளனர்.

2 கேமராக்கள் பழுதான விஷயமும், சிசிடிவி கேமராக்களை எங்கு சென்று ஆப் செய்வது? என்பதும் வனத்துறை அலுவலகத்தில் உள்ளவர்களுக்கே தெரியும் என்பதால், செம்மரக்கட்டைகள் திருட்டு வழக்கில் வனத்துறையினருக்கு தொடர்பு இருப்பதை 100 சதவீதம் உறுதிப்படுத்துவதாக விசாரணை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 கார்களில் வந்தவர்கள் யார்? அவர்களில் வனத்துறையினரும் யாராவது இருந்தார்களா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலகத்துக்கு 2 கார்களில் வந்தவர்கள் போலி பதிவெண்களை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கார்கள் எங்கு சென்றது என்பதை கண்டறிய திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை சாலை, நீதிபதிகள் குடியிருப்பு, திருப்பத்தூர் டவுன் காவல் நிலையம் உட்பட மாவட்ட எல்லை பகுதி வரை முதற்கட்டமாக சுமார் 504 சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய தொடங்கி உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து காரில் கடத்தி வரப்பட்டு பிடிபட்ட செம்மரக்கட்டைகள்தான் திருடப்பட்டுள்ளது. இதனால் செம்மரக்கட்டைகளை கடத்திய வழக்கில் பிடிபட்டவர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

Tags : Forest Department ,Tirupattur District Forest Office ,Tirupattur ,Tirupattur DSP Murali ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...