×

புகையிலை பொருட்களை பார்களில் விற்பனை செய்யக்கூடாது: டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு

சென்னை: டாஸ்மாக் பார்களில் புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: மதுக்கூடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. மேலும் பீடி, சிகரெட் போன்றவை விற்க கூடாது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மட்காத, மறுசுழற்சி செய்ய இயலாத பிளாஸ்டிக் பொருட்களை மதுபான சில்லரை விற்பனைக்கடைகளுடன் இணைந்துள்ள மதுக்கூடங்களில் பயன்பாட்டில் இருக்கக் கூடாது.

தண்ணீர் பாட்டில், குளிர்பானங்கள், நொறுக்கு தீணிகள் அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தின்பண்டங்களுக்கான விலைப்பட்டியலை பார்வைக்கு வைப்பதுடன் தின்பண்டங்கள் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டதாகவும், சுத்தமாக பராமரிக்கப்பட்டதாகவும் அது தொடர்பான அரசின் அத்தனை சட்ட திட்டங்களுக்கு உட்பட்டனவாகவும் இருத்தல் அவசியம். தின்பண்ட பொருள்கள் உணவு பொருள் தரக்கட்டுபாடு சோதனைக்கு உட்படுத்தப்படும்.

மேலும் டாஸ்மாக் நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் நேரத்தில் மட்டுமே மதுகூடங்கள் செயல்பட வேண்டும். நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் வேலை நேரத்தின் போது மட்டுமே ஒப்பந்ததாரருக்கும், பணியாளர்களுக்கும் மதுக்கூடத்தில் அனுமதியளிக்கப்படும். டாஸ்மாக் கடையின் விடுமுறை நாட்களிலோ அல்லது நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படும் வேலை நேரத்துக்கு அப்பாற்பட்டோ மதுக்கூடம் திறந்து வைத்திருந்தால் உடனடியாக இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். மேலும் காப்புத் தொகையை திரும்பப் பெற இயலாது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : TASMAC administration ,Chennai ,Tamil Nadu… ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...