×

தமிழ்நாட்டில் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை அளிக்க புது நடைமுறை: ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் விபி-ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வாறு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்று புதிய நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிகாரிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் ஆணையர் வெளியிட்டுள்ள புதிய நடைமுறையில் கூறப்பட்டுள்ளதாவது :  உடல் உழைப்பினை மேற்கொள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் முட்புதர்களை அகற்றுதல், மரக்கன்றுகள் நடுதல், மண் மூடுதல், நீர்பாய்ச்சுதல், மண்வரப்பு அமைத்தல், கல்வரப்பு அமைத்தல் மற்றும் அகழி அமைத்தல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும்.

பணி தளத்தில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அவர்களை மேலே கூறப்பட்டுள்ள சிறப்புப் பணிகளை மேற்கொள்ள மட்டுமே அனுமதிக்க வேண்டும். பணி தளங்களில் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் மட்டுமே மண் தொடர்பான பணிகளுக்கு பயன்படுத்தலாம். அப்போது அவர்கள் 5 அல்லது 10 பேர் கொண்ட குழுவாக பிரிக்கப்பட்டு, சாதாரண தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய பணி அளவில் 50 சதவீத அளவினை மட்டுமே அவர்கள் மேற்கொள்ள முன் அளவீடு செய்யப்பட வேண்டும்.

மேற்படி மண் வேலை சார்ந்த பணிகளை, 4 மணி நேரம் மட்டுமே செய்தால் போதுமானது. வேலை அட்டை கோரும் தகுதியுடைய அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தனித்துவமான வேலை அட்டை 15 தினங்களுக்குள் வழங்கப்பட வேண்டும். வேலை கோரும் மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித நிபந்தனைகளுமின்றி வழங்கப்பட வேண்டும். விபிஜி ராம்-ஜி 2025 வழங்குவதில் எவ்வித தொய்வும் இருத்தல் கூடாது.

மாற்றுத்திறனாளிகளுக்கென வரையறுக்கப்பட்டுள்ள பணிகள் மட்டுமே வழங்கப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்கும் விதமாக பிரதி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில் குறைகேள் முகாம் நடத்தப்பட்டு அவர்களது குறைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட வேண்டும்.  இந்த நடைமுறைகளை மாவட்ட அளவில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முறையாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Rural Development ,Panchayat Raj ,Chennai ,Panchayat Raj Commissioner ,Tamil Nadu… ,
× RELATED அமைதியான முறையில் போராடிய இளைஞர்கள்...