பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்

திருமலை: பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தெலங்கானா மாநிலம், ஐதராபாத் தேசிய காவல் அகாடமியில் பயிற்சி பெற்று வரும் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், அதே அகாடமியில் பயிற்சி பெறும் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியான உதய்கிருஷ்ண ரெட்டி மீது அட்டப்பூர் போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.

அதில், உதய்கிருஷ்ண ரெட்டி எனக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கிறார். செல்போனில் ஆபாச தகவல்களை அனுப்பி துன்புறுத்துகிறார். கடந்த 9ம் தேதி எனது தலைமுடியை பிடித்து, கத்தியை காண்பித்து மிரட்டி ஒரு அறையில் வலுக்கட்டாயமாக தள்ளி பூட்டினார். பின்னர் அந்த அறையில் வைத்து ஆபாசமாக வீடியோ பதிவு செய்தார். அதனை வாட்ஸ்அப் மூலம் எனது கணவருக்கு அனுப்புவதாக மிரட்டி வருகிறார் என குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்பேரில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய்கிருஷ்ண ரெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த உதய்கிருஷ்ண ரெட்டி திடீரென தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய்கிருஷ்ண ரெட்டியை இடைநீக்கம் ெசய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதுகுறித்து முன்னாள் சிபிஐ இயக்குனரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான நாகேஸ்வர ராவ், பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டியின் விவகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி உதய் கிருஷ்ண ரெட்டிக்கு நீதி கிடைக்க வேண்டும். பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அவரை இடைநீக்கம் செய்தது பல கேள்விகளை எழுப்புகிறது. பரஸ்பர சம்மதத்துடன் ஒரு உறவு இருந்தால், இருவர் மீதும் சமமான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒருவர் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக இருக்காது. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

Related Stories: