புதுடெல்லி: இளைஞர்களின் எதிர்காலத்துடன் இனி யாரும் விளையாடாத வகையில், நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறி உள்ளார். நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த இளைஞர்கள் மாணவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தும் போராட்டங்கள் நாட்டையே உலுக்கி உள்ளன.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் (என்டிஏ) நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த இக்கூட்டத்தில் என்டிஏ எம்பிக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். இது குறித்து கூட்டத்திற்குப் பிறகு ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீட் வினாத்தாள் கசிவு குறித்த தகவல்கள் வெளியான உடனேயே அரசு நடவடிக்கை எடுத்ததாகவும், 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.
அதே சமயம், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நீட் மறுதேர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அது வெற்றிகரமாக நடத்தப்பட்டு முடிவுகள் தாமதமின்றி அறிவிக்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார். எதிர்காலத்தில் இதுபோன்ற வினாத்தாள் கசிவுகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கூறிய பிரதமர் மோடி, இத்தகைய கடுமையான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது முன்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுவதையும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய நாட்டின் சிறந்த வழக்கறிஞர்களின் உதவியுடன் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தை பொறுத்த வரை, இளைஞர்களின் எதிர்காலத்துடன் யாரும் விளையாடாதாததை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் மோடி, எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவுகள் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய கட்சி வேறுபாடின்றி, அனைத்து மாநில அரசுகளும் ஒன்றிய அரசுடன் கைகோர்க்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
இது கட்சி அரசியல் சார்ந்த விவகாரம் அல்ல, தேசிய நலன் சார்ந்த விவகாரம் என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளிகளை தண்டிக்கவும், குறைபாடுகள் இல்லாத ஒரு அமைப்பை ஒன்றிணைந்து உருவாக்கவும் வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதுதொடர்பாக கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து எம்பிக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கினார். இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
* முக்கிய மசோதாக்களை நிறைவேற்றியே தீருவோம்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், ‘‘நாட்டின் நலனுக்காக கொண்டுவரப்படும் அனைத்து முக்கிய மசோதாக்களையும் நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியான ஒற்றுமையுடன் உள்ளோம். எதிர்க்கட்சிகளுக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனாலும், நாடு, நாட்டின் எதிர்காலம் மற்றும் இளைஞர்களின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட முன்வருமாறு நாங்கள் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்’’ என்றார்.
* அரசின் சாதனைகளை மக்களிடம் சொல்லுங்கள்
கூட்டத்தில், பல்வேறு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் சாதனை குறித்து பிரதமர் மோடி விளக்கினார். இவற்றில் விவசாயிகளின் நலன்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும், ஒன்றிய அரசின் சாதனைகளை ஒவ்வொரு கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் மக்களிடம் சென்று விளக்க வேண்டுமெனவும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
