கெட்டவர்களை விட நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதுதான் உண்மையா?

?ஆன்மிகத்தின் மிகச் சிறந்த பலன் எது?
– சத்தியசீலன், திருச்சி.

ஆன்மிகத்தின் மிகப் பெரிய பலன் விழிப்புணர்வும் கவனமும் ஆகும்.ஒரு துறவி தன் சீடர்களுக்கு ஒருநாள் செய்முறைப் பாடம் நடத்தினார். ஒரு நீளமான துணியை பல இடங்களில் சிக்கலாக முடிச்சுப் போட்டுவிட்டு, “இதில் உள்ள முடிச்சுகளை அவிழ்த்துப் பாருங்கள்” என்று சீடர்களிடம் கொடுத்தார். ஒவ்வொருவரும் முயன்றனர். ஒருவர் ஒரு முடிச்சை இழுத்தார். அது இன்னொரு முடிச்சை இறுக்கியது. இன்னொருவர் வேறு வழியில் முயன்றார். அதுவும் மேலும் சிக்கலையே உண்டாக்கியது. இறுதியில் அந்தத் துணி இருந்ததைவிட அதிகமாகச் சிக்கிக்கொண்டது.

கடைசியாக ஒரு சீடன், “நான் முயற்சி செய்து பார்க்கிறேன்” என்று துணியை வாங்கினான். ஆனால் அவன் உடனே இழுக்கவில்லை. சுமார் ஐந்து நிமிடங்கள் அமைதியாக அந்த முடிச்சுகளை உற்றுக் கவனித்தான். பிறகு ஒரு குறிப்பிட்ட சுருக்கை மட்டும் மெதுவாக இழுத்தான்.ஆச்சரியம்! மற்ற எல்லா முடிச்சுகளும் ஒன்றன்பின் ஒன்றாக எந்தச் சிரமமும் இல்லாமல் அவிழ்ந்துவிட்டன. அப்போது குரு கூறினார்:“நீங்கள் அனைவரும் பலமாக இழுத்தீர்கள்.

ஆனால் எங்கு இழுக்க வேண்டும் என்பதை கவனிக்கவில்லை. இவன் முதலில் புரிந்து கொண்டான்; பிறகுதான் செயல்பட்டான். அதனால்தான் வெற்றி பெற்றான்.”வாழ்க்கையும் இப்படித்தான். விழிப்புணர்வும்கவனமும் உள்ளவர்கள், எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் அதன் ஆணிவேரை கண்டுபிடித்து சரி செய்துவிடுவார்கள். விழிப்புணர்வு இல்லாதவர்கள், பிரச்னையைத் தீர்க்க முயற்சிக்கும்போதே அதை மேலும் சிக்கலாக்கிக் கொள்வார்கள். அதனால்தான் ஆன்மிகம் நமக்கு முதலில் கற்றுத் தருவது கவனித்து வாழ்வது என்பதைத்தான்; அவசரப்பட்டு செயல்படுவதை அல்ல.

இதற்குச் சிறந்த உதாரணமாக சுவாமி விவேகானந்தர் வாழ்க்கையில் சொல்லப்படும் ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம். வெளிநாட்டில் முதன்முறையாக துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, பயிற்சி பெற்றவர்களால்கூட இலக்கைத் துல்லியமாகத் தாக்க முடியவில்லை. ஆனால் விவேகானந்தர் ஒரே முயற்சியில் இலக்கைத் தாக்கினார். அதைப் பார்த்து காரணம் கேட்டபோது, “வெற்றியின் ரகசியம் உடல் வலிமையில் இல்லை; மனம் முழுவதும் இலக்கின் மீது ஒரு முகப்படுத்தப்பட்ட கவனத்தில்தான் இருக்கிறது” என்றார்.ஆன்மிகம் என்பது அற்புத சக்திகளைப் பெறுவதற்காக அல்ல; சரியான நேரத்தில், சரியான முடிச்சை அறிந்து இழுக்கும் விழிப்புணர்வைப் பெறுவதற்காகத்தான். அதுவே வாழ்க்கையின் மிகப் பெரிய வெற்றியாகும்.

?வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கான முதல் ரகசியம் என்ன?
– பாக்கியநாதன், சேலம்.

நாம் விரும்பிய எல்லாமே நம்மிடம் இருக்காது. ஆனால் இன்று நம்மிடம் இருக்கும் பல விஷயங்கள், பொருள்கள், வசதிகள், உறவுகள் எத்தனையோ பேருக்கு கிடைக்கவில்லை என்பதை நினைத்துப் பாருங்கள். நன்றி உணர்வு வந்துவிட்டால், மகிழ்ச்சி தானாகவே வந்துவிடும்.

?எப்போதும் சந்தோஷமாக வாழ என்ன செய்ய வேண்டும்?
– ஸ்ரீ வித்யா ரெங்கநாதன், திண்டிவனம்.

எதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு வாழுங்கள். மற்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். யாரிடமும் பொறாமைப் படாதீர்கள். உங்கள் வாழ்க்கையை மற்றவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதையும் வேறுபட்டது.

?மனஅமைதி எப்போது குலைகிறது?
– ராமசாமி, விளாத்திகுளம்.

எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அதிகமானபோது. சில விஷயங்கள் தெரியாமலே இருப்பது நமக்கு நிம்மதியைத் தரும் என்று நினைக்க வேண்டும். ஒவ்வொரு விஷயத்திற்கும் விளக்கம் தேடிக்கொண்டே இருந்தால், மனஅமைதி தொலைந்துவிடும்.

?திரும்பத் திரும்ப பிறக்க வேண்டிய அவசியம் என்ன?
– தேவநாதன், புதுக்கோட்டை.

இறைவன் நம்மை மீண்டும் மீண்டும் பிறக்க வைப்பதில்லை; நம்முடைய ஆசைகளும், கர்மவினைகளும்தான் மறுபிறவிக்குக் காரணம்.

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோபராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணானி
அன்யானி ஸம்யாதி நவானி தேஹீ
என்கிறது கீதை (2.22).

ஒரு மனிதன் பழைய, கிழிந்த ஆடைகளை கழற்றி புதிய ஆடை களை அணிவது போல, ஆன்மாவும் பழைய உடலை விட்டு புதிய உடலை ஏற்றுக்கொள்கிறது என்பது ஸ்லோகத்தின் பொருள். ஒரு மாணவன் பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தால், அதே வகுப்பை மீண்டும் படிக்க வேண்டியிருக்கும். பள்ளி அவனைத் தண்டிப்பதற்காக அல்ல; அவன் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது இருப்பதால்தான். அதுபோலவே, வாழ்க்கையும் முடிக்கப்படாத பாடங்களை முடிக்க மீண்டும் ஒரு வாய்ப்பைக் கொடுக்கிறது.

?இந்தக் காலத்தில் அஸ்வமேத யாகம் செய்ய முடியுமா?
– ஜெயலட்சுமி, ஸ்ரீ வில்லிப்புத்தூர்.

சாஸ்திரப்படி கலியுகத்தில் அஸ்வமேத யாகம் நடை முறையில் சாத்தியமில்லை. அதற்குத் தேவையான தகுதி, அமைப்பு, வேத நிபுணர்கள், சமூக ஒற்றுமை இப்போது இல்லை. கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமே உயர்ந்த யாகம் என்று பல புராணங்கள் வலியுறுத்துகின்றன. இன்று ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு நன்மை செய்வதும், இறைநாமத்தைப் பரப்புவதும் அஸ்வமேத யாகத்தின் பலனைவிட உயர்ந்ததாகவே கருதப்படுகிறது.

?வாழ்க்கையில் யாரை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது?
– ராஜசேகரன், கோவை.

நம்மீது உண்மையான அன்பு செலுத்து பவர்களை புறக்கணிக்கக் கூடாது. இன்று உண்மையான அன்பும், நிபந்தனையற்ற அக்கறையும் மிகவும் அரிதாகிவிட்டன. நம்மை நேசிப்பவர்களை மதிப்பதும், பாதுகாப்பதும் வாழ்க்கையின் பெரிய செல்வம்.

?கஷ்ட காலத்திலும் நல்லது ஏதாவது இருக்கிறதா?
– அனந்தநாராயணன், திருநாகேஸ்வரம்.

நிச்சயமாக இருக்கிறது. கஷ்டங்கள் நம்மை வாட்டுவதோடு மட்டுமல்ல; நம்மைச் சுற்றியிருப்பவர்களின் உண்மையான முகத்தையும்காட்டுகின்றன. யார் நம்மோடு நிற்கிறார்கள், யார் விலகிச் செல்கிறார்கள் என்பதை எந்தக் கண்ணாடியையும் விட தெளிவாகக் கஷ்டகாலம்தான் காட்டுகிறது.

?ஜோதிடர்கள் உண்மையைச் சொல்ல வேண்டுமா? நன்மை யைச் சொல்ல வேண்டுமா?
– சுந்தரமூர்த்தி, சென்னை.

உண்மையைச் சொல்ல வேண்டும்; ஆனால், அது நம்பிக்கையை அழிக்கும் வகையில் அல்ல. ஒரு மருத்துவர் நோயை மறைக்கமாட்டார். அதே நேரத்தில் “உங்களுக்கு இனி வாழ்வே இல்லை” என்றும் கூறமாட்டார். சிகிச்சையையும் சேர்த்தே சொல்வார். ஜோதிடம் பயமுறுத்துவதற்காக அல்ல; வழிகாட்டுவதற்காக.

?கெட்டவர்களை விட நல்லவர்கள் துன்பப்படுகிறார்கள் என்பதுதான் உண்மையா?
– கார்த்திகேயன், குடவாசல்.

வெளியே பார்த்தால் அப்படித் தோன்றலாம். ஆனால், ஆன்மிக ரீதியில் அது முழு உண்மை அல்ல. ஒரு மருத்துவர் ஆரோக்கியமானவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மாட்டார். குணமாக வேண்டியவருக்குத்தான் செய்வார். அதுபோல இறைவன், உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல விரும்புபவர்களை வாழ்க்கை மூலம் பக்குவப்படுத்துகிறார். ராமாயணத்திலும், மகாபாரதத்திலும் தர்மவான்களும் சோதனைகளைச் சந்திக்கிறார்கள்; ஆனால், இறுதியில் தர்மமே வெல்லுகிறது.

?உயர்பதவிகள் கிடைக்க என்ன மந்திரத்தை சொல்ல வேண்டும்?
– வா.வாசுதேவபெருமாள், காஞ்சிபுரம்.

உயர் பதவிகள் கிடைக்க உழைப்பு முக்கியம். இருந்தாலும் இறையருளும் துணை செய்ய சில மந்திரங்கள் உதவும். பதவி உயர்வு கிடைக்க, மகாலட்சுமியை வேண்டி “சதுரங்க பலாபேதாம் தனதான்ய ஸீகேஸ்வரீம் அச்வாரூடா மஹம் வந்தே ராஜலக்ஷ்மீம் ஹிரண்மயீம்” என்ற மந்திரத்தை தினமும் துதிக்கலாம். வெள்ளிக்கிழமைகளில் தாமரை மற்றும் குங்குமப்பூவால் அர்ச்சித்து, தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டைச் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும். ேமலும் அபிராமி அந்தாதியின் இறுதியில் வரும் நூற்பயனை சொல்லுங்கள்.

?ஒரே நேரத்தில் மொத்தம் எத்தனை பாடல்களைப் பாடமுடியும்?
– சிவசங்கரன், திருமுல்லைவாயில்.

வைணவ சமய வரலாற்றில் இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சுவாமி வேதாந்த தேசிகர். திருவரங்கத்தில் அரங்கநாதனின் திருப்பாதுகைகளைப் போற்றும் வகையில், ஒரே இரவில் 1008 பாடல்களை இயற்றினார் என்று பரம்பரைச் செய்தி கூறுகிறது. அந்த அற்புதமான நூலே பாதுகா சகஸ்ரம். அது வெறும் எண்ணிக்கையின் சாதனை மட்டுமல்ல; இலக்கணம், யாப்பு, அணி, பக்தி ஆகிய அனைத்தும் கலந்த இலக்கிய மாமணி.

இதுபோன்ற ஒரு சுவையான நிகழ்ச்சி அவ்வையார் பற்றியும் சொல்லப்படுகிறது. ஒரு நாள் சோழ மன்னன், தன் அரசவையில் இருந்த புலவர்களிடம், “ஒரே இரவில் ஒரு கோடிப் பாடல் பாட வேண்டும்” என்று கட்டளையிட்டாராம். அதைக் கேட்ட அரசவைக் கவிஞர்கள் திகைத்துப் போய் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றனர். அவர்களின் நிலையைப் பார்த்த அவ்வையார் புன்னகையுடன்,”ஒரு கோடிதானே? விடுங்கள். நான் நான்கு கோடி பாடு கிறேன்!” என்று கூறி, ஒரே ஒரு பாடலிலேயே நான்கு “கோடி” பாடல் பாடினார்.
அந்தப் பாடல்:

மதியாதார் முற்றம் மதித்தொருகால் சென்று
மிதியாமை கோடி பெறும்;
உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;
கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மொடு
கூடுவதே கோடி பெறும்;
கோடானு கோடி கொடுத்தினும் தன்னுடை நாக்கு
கோடாமை கோடி பெறும்.

இங்கு “கோடி” என்பது எண்ணிக்கையை மட்டும் குறிக்கவில்லை; அளவிட முடியாத பெருமதிப்பையும் குறிக்கிறது. ஒரேபாடலில் நான்கு முறை “கோடி” என்ற கருத்தை அமைத்து, “நான்கு கோடி பாடிவிட்டேன்” என்று நகைச்சுவையுடனும் அறிவுக் கூர்மையுடனும் அவ்வையார் பதிலளித்ததாக இந்த மரபுக்கதை கூறுகிறது.

இந்தக் கதைகள் அனைத்தும் ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகின்றன. கவிதை என்பது வெறும் சொற்களை அடுக்குவது அல்ல; அது இறையருள், புலமை, நினைவாற்றல், மொழி ஆளுமை, கற்பனை ஆகிய அனைத்தும் ஒன்றிணையும் தெய்வீகக் கலை.

?ஏன் நல்ல நூல்களை வாசிக்க வேண்டும்?
– உஷா, மந்தவெளி.

“ஏன் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டும்?” என்று கேட்பது போலத்தான், “ஏன் நல்ல நூல்களை வாசிக்க வேண்டும்?” என்ற கேள்வியும் இருக்கிறது. மனிதன் உடலுக்குச்சுத்தமான காற்று எவ்வளவு அவசியமோ, மனதிற்கும் அறிவிற்கும் நல்ல நூல்கள் அவ்வளவு அவசியம். சுவாசிப்பது உடலுக்கு உயிர் கொடுக்கிறது; வாசிப்பது உள்ளத்திற்கு உயிர் கொடுக்கிறது.

நாம் தினமும் எந்தக் காற்றை சுவாசிக்கிறோமோ, அதுவே, நம் உடல்நலனை நிர்ணயிக்கிறது. அதுபோல, எந்த நூல்களை வாசிக் கிறோமோ, அவையே நம் சிந்தனையையும், குணத்தையும், வாழ்க்கைப் பார்வையையும் உருவாக்குகின்றன. நல்ல நூல்கள் நமக்குள் நல்ல எண்ணங்களை விதைக்கின்றன; தீயநூல்கள் அல்லது தரமற்ற வாசிப்புகள் மனதை மாசுபடுத்துகின்றன.

ஒரு நல்ல நூல் என்பது வெறும் தகவல்களைத் தரும் கருவி அல்ல. அது ஒரு நல்ல ஆசிரியர், நல்ல நண்பர், நல்ல வழிகாட்டி. பல ஆண்டுகள் வாழ்க்கையை அனுபவித்த பெரியோர்களின் ஞானத்தை சில மணி நேரத்தில் நமக்குக் கற்றுத் தருகிறது. நாம் செய்ய வேண்டிய தவறுகளைக் கூட செய்யாமல், பிறர் அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளச் செய்கிறது.

நல்ல நூல்களைவாசிக்கும் பழக்கம் உள்ளவர்களிடம் பொறுமை அதிகரிக்கும்; சிந்தனை ஆழமாகும்; முடிவெடுக்கும் திறன் மேம் படும். வாழ்க்கையின் இன்ப-துன்பங்களை சமநிலையுடன் எதிர்கொள்ளும் மனப் பக்குவமும் உருவாகும். குறிப்பாக ஆன்மிக நூல் கள், மனித வாழ்க்கையின் உண்மையான நோக்கம் என்ன என்பதை உணர்த்தி, மன அமைதிக்கும் உயர்ந்த வாழ்வுக்கும் வழிகாட்டுகின்றன. உடலுக்கு தினமும் உணவு தேவைப்படுவது போல, மனதிற்கும் தினமும் நல்ல வாசிப்பு தேவை. ஒரு நாளைக்கு சில பக்கங்களாவது நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கம், ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றிவிடும்.

தேஜஸ்வி

Related Stories: