கோவை பாரதியார் பல்கலை.,யில் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு தனி விடுதி

கோவை : கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் பாலின மாணவர்களுக்கு என தனியாக விடுதி ஏற்படுத்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ளூர், வெளியூர் சேர்ந்த இளங்கலை, முதுநிலை மாணவ, மாணவிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு என தனித்தனியாக 10 விடுதிகள் செயல்பட்டு வருகிறது. தவிர, வெளிநாட்டு மாணவர்களுக்கு என சர்வதேச விடுதியும் உள்ளது.

பெண்கள் தங்கி பயில கண்ணம்மா, பெரியார், வாசுகி, செல்லம்மால், கஸ்தூரிபாய் என்ற பெயரில் விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழக விடுதிகள் தொடர்பாக மாணவர்கள் தரப்பில் அடிக்கடி புகார்கள் அளிக்கப்படுகின்றன.

குறிப்பாக, விடுதியின் தரம், உணவுத்தரம் உள்ளிட்டவை குறித்த புகார்கள் வந்தது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், விடுதிகளை தரத்தை உறுதிப்படுத்தவும், மாணவர்களுக்கு விடுதியில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இதற்காக சிறப்பு குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாணவர்களிடம் அவர்களது குறைகளை கேட்டு பெற்று அதன் அடிப்படையில் நடவடிக்கையை எடுக்க உள்ளனர். மேலும், பாரதியார் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதிகள் இருந்து வரும் நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என தனியாக விடுதிகள் இல்லை. இதனால், பல்கலையில் படிக்கும் மூன்றாம் பாலினத்தவர்கள் விடுதியில் தங்கி படிக்க முடியாத நிலை இருந்து வருகிறது.

இது தொடர்பாக பல்கலையில் படிக்கும் மூன்றாம் பாலினத்த மாணவர்கள் தரப்பில் தங்களுக்கு என தனியாக விடுதி வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இவர்களது கோரிக்கைகளின் அடிப்படையில் சிண்டிகேட் கூட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என தனியாக விடுதி ஏற்படுத்தி கொடுக்க ஆலோசிக்கப்பட்டு, அது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர் பலர் உயர்கல்வி படித்து வந்தாலும், கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கு என தனியாக விடுதிகள் எங்கும் இல்லாத நிலையில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கைக்கு மூன்றாம் பாலினத்தவர்கள் தரப்பில் ஆதரவு மற்றும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலை.யின் பதிவாளர் ராஜவேல் கூறுகையில்,“பல்கலையில் உள்ள விடுதிகளில் மாணவர்களுக்கான வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் அவர்களிடம் கோரிக்கைகளை பெற உள்ளோம். இதற்காக தனியாக குழு அமைக்கப்பட உள்ளது. மேலும், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 முதல் 25 பேர் வரை தங்கும் வகையில் ஒரு விடுதியை அமைக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பாக சிண்டிகேட் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு உள்ளது. அடுத்தக்கட்ட பணிகள் மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.

இது குறித்து திருநங்கை மாணவி யாஸ்மிதா கூறுகையில்,“நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படித்து வந்தாலும், அங்கு விடுதி கிடைக்கவில்லை. தவிர, திருநங்கை என்பதால் பல்கலைக்கழகத்தின் அருகிலும் விடுதி கிடைக்கவில்லை. இதனால், வெள்ளலூரில் தற்போது இருந்து வருகிறேன். இங்கிருந்து தான் தினமும் பல்கலைக்கு செல்கிறேன்.

இங்கிருந்து பல்கலை செல்வதற்கு ஒரு மணி நேரம் ஆகிறது. இந்நிலையில், பல்கலைக்கழகம் சார்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என தனியாக விடுதி அமைத்து கொடுக்கும் முயற்சி மிகவும் பாராட்டிற்குரியது. இதனால், பலர் பயன்பெறுவார்கள்.

அவர்களின் முயற்சிக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விடுதியை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். அது உயர்கல்வி படிக்க விரும்பும் எங்களுக்கு கூடுதல் பாதுகாப்பையும், படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் அளிக்கும்” என்றார்.

Related Stories: