சோழவந்தான் அருகே நர்சரி கார்டன் பிரச்னையில் ஒன்றிய அலுவலகம் முற்றுகை

*கிராம மக்கள் திடீர் போராட்டம்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்ட நர்சரி கார்டன் மற்றும் அதன் கம்பி வேலிகள் சேதமான விவகாரத்தில், கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்டது கீழமட்டையான் கிராமம். இவ்வூர் அருகே மலையடிவாரத்தில் விளக்கு நாச்சியம்மன் கோயில் உள்ளது.

இக்கோயில் பகுதியில் சமீபத்தில், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் கம்பி வேலியுடன் கூடிய நர்சரி கார்டன் அமைக்கப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் இந்த நர்சரி கார்டனின் கல் தூண்களுடன் கூடிய முள் வேலிகளை சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து காடுபட்டி காவல் நிலையத்தில், கீழமட்டையான் கிராமத்தைச் சேர்ந்த 5 நபர்கள் மீது, ஊராட்சி செயலர் விக்னேஷ் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து நேற்று காலை சோழவந்தான் அருகே திருவேடகத்தில் செயல்படும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கீழமட்டையான் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டனர். கோயில் பகுதியில் அமைக்கப்பட்ட நர்சரி கார்டனை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும், புகார் கூறப்பட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யக்கூடாது என அவர்கள் கோஷமிட்டனர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் மற்றும் சோழவந்தான் போலீசார், இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இது குறித்து கீழ மட்டையான் கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் ஊர் அருகில் உள்ள விளக்கு நாச்சியம்மன் கோயில் திருவிழா வருடத்தில் இரண்டு முறை விமரிசையாக நடைபெறும். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

மேலும் வெள்ளி, செவ்வாய் உள்ளிட்ட நாட்களில் அதிகமானோர் இங்கு வந்து செல்வார்கள். இந்த கோயிலுக்கு செல்லும் பாதை அருகே அன்னதானம் நடைபெறும் பகுதி மற்றும் வாகனம் நிறுத்தும் பகுதியில், மேலக்கால் ஊராட்சி சார்பில் நர்சரி கார்டன் அமைத்துள்ளனர்.

இதனால் பக்தர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இதை வேறு பகுதியில் மாற்றி அமைக்க வேண்டும். நர்சரி கார்டன் கம்பி வேலியை எங்கள் ஊர்க்காரர்கள் யாரும் சேதப்படுத்தவில்லை. எனவே 5 பேர் மீது கொடுக்கப்பட்ட புகாரை வாபஸ் பெற வேண்டும். எங்கள் கோரிக்கை மீது 2 நாளில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனால் தற்காலிகமாக போராட்டத்தை தள்ளி வைத்துள்ளோம். இந்த பிரச்னைக்கு உரிய முடிவு கிடைக்காவிட்டால் ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கூறினர். பொதுமக்களின் திடீர் போராட்டத்தால், இப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: