அசைவம் சாப்பிட்டு பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

ஆரணி ஓட்டலில் எலிகள் சாப்பிட்ட உணவு சப்ளை

*ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் நேரில் கண்டு அதிர்ச்சி

*500 கிலோ உணவுகள் பறிமுதல்; 2 கடைகளுக்கு ‘சீல்’

ஆரணி : ஆரணியில் அசைவம் சாப்பிட்டு பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஓட்டல்களில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் அங்கு எலிகள் சுற்றித்திரிவதைவும், எலிகள் சாப்பிட்ட உணவுகளை சப்ளை செய்வதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து 2 கடைகளுக்கு சீல் வைத்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பாஸ்புட், அசைவ ஓட்டல்களில் தரமற்ற கெட்டுப்போன சிக்கன், மட்டன், மீன், இறால் மற்றும் தந்தூரி சிக்கன் உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. இதனை சாப்பிடும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும், உயிரிழப்பு சம்பவங்களும் தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி ஆரணியில் நடந்த ஆடி வெள்ளி திருவிழாவிற்கு பெற்றோருடன் வந்த 4 சிறுவர்கள் உட்பட 15 பேர் திருவிழாவை முடித்து விட்டு அன்றிரவு ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் கூட்ரோடு பகுதியில் உள்ள ஒரு அசைவ ஓட்டலில் சிக்கன் தந்தூரி, சிக்கன் ரைஸ், கிரில் சிக்கன், இறால், சிக்கன், மட்டன் பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டனர்.

பின்னர் வீட்டிற்கு சென்ற அவர்களுக்கு புட்பாய்சன் ஏற்பட்டு வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கத்தால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பானுசுஜாதா தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கராஜ் மற்றும் அதிகாரிகள் அந்த ஓட்டலில் ஆய்வு செய்து, உணவு மாதிரிகளை சேகரித்து சேலம் ஆய்வகத்திற்கு அனுப்பினர்.

மேலும், ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுகுறித்து, ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி திருவிழாவுக்கு வந்தபோது இந்த ஓட்டலில் தந்தூரி, கிரில் சிக்கன் பார்சல் வாங்கி சென்று சாப்பிட்ட ஆரணி இபி நகரை சேர்ந்த யோகேஷ்(25), களம்பூரைச் சேர்ந்த சந்துரு(23), தீபா(27) மற்றும் மேல்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மகன் பவித்ரன்(8) ஆகிய 4 பேருக்கு நேற்று முன்தினம் கடுமையான வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் ஒரே ஓட்டலில் அசைவம் சாப்பிட்டு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர சம்பந்தப்பட்ட ஓட்டலில் சாப்பிட்ட பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே ஆரணி ஓட்டல்களில் தற்போது அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி ஆரணி டவுன் பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட அசைவ ஓட்டல்கள் மற்றும் பாஸ்ட்புட் கடைகளில் நேற்று மாலை உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கராஜ், நகராட்சி காதார ஆய்வாளர் (பொறுப்பு) பிரதாப், வருவாய் ஆய்வாளர் தமிழ்வாணன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஆரணி டவுன் காந்தி சாலையில் உள்ள அசைவ ஓட்டலில் சமையலறை அசுத்தமாக இருந்தது. மேலும் தரமற்ற முறையில் உணவு சமைப்பது தெரியவந்தது.

அதேபோல் ஓட்டலில் சிக்கன் ரைஸ் போட வைத்திருந்த சாப்பாட்டை 5க்கும் மேற்பட்ட எலிகள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதே சாப்பாட்டில் சிக்கன் ரைஸ் போட்டு சப்ளை செய்வது தெரியவந்தது. இதையடுத்து சுகாதாரமற்ற நிலையில் எலிகள் சாப்பிட்ட சாப்பாடு, சிக்கன் பக்கோடா, முட்டை பஜ்ஜி என 15 கிலோ இறைச்சி உணவுப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அப்போது அங்கு இறந்து கிடந்த எலியையும் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்த ஓட்டல் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி ஓட்டலை பூட்டி சீல் வைத்தனர். இதேபோல் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த மற்றொரு ஓட்டலுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அதன்படி நேற்று நடந்த ஆய்வில் 2 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட கடைகளில் இருந்து 500 கிலோ தரமற்ற உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இந்த ஆய்வின்போது, சுகாதார மேற்பார்வையாளர் வாசுதேவன், நகராட்சி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பதிவேடுகளை பராமரிக்க உத்தரவு

ஓட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு சமைக்க கூடாது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி பராமரிக்க வேண்டிய பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும்.

ஓட்டல் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் குடிநீரின் தரம் தொடர்பான சான்றுகள் இருக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006-ன் கீழ் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: