விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் 1100 பேர் ராஜினாமா: ஜெயலலிதா சமாதிமுன் கடிதத்தை வைத்து கதறல்

 

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டத்தில் சி.வி.சண்முகம் ஆதரவு அதிமுக நிர்வாகிகள் 1100 பேர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்து அதற்கான கடிதத்தை சென்னையில் ஜெயலலிதா சமாதி முன் வைத்து கதறி அழுதனர். விழுப்புரம் மாவட்டம் வல்லம் பகுதியில் நடந்த அதிமுக ஆலோசனை கூட்டத்தின் போது, மாவட்ட செயலாளர் பசுபதி கார் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பசுபதி பரிந்துரையின் பேரில், கடந்த 15ம் தேதி சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்களான மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், திண்டிவனம் நகர செயலாளர் ரூபன்ராஜ், மயிலம் தொகுதியை சேர்ந்த 4 ஒன்றிய செயலாளர்கள் என, 11 பேரின் கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பறித்தார்.

இது, சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள சி.வி.சண்முகம் ஆதரவாளர்களாக உள்ள ஒன்றிய, நகர, கிளை மற்றும் அணி செயலாளர்கள் என 1100 பேர் ராஜினாமா முடிவு எடுத்தனர். அதன்படி மாவட்டத்தில் உள்ள சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் 500க்கும் மேற்பட்டோர் பஸ், கார் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் திண்டிவனத்திலிருந்து நேற்று காலை சென்னைக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர் மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதியின் முன் தரையில் விழுந்து வணங்கினர்.

அப்போது எடப்பாடிக்கு எதிராக கோஷமிட்டதோடு, தாங்கள் கொண்டு வந்த ராஜினாமா கடிதத்தை சமாதியின் முன்பு வைத்து, கொடநாடு வழக்கை தமிழக முதல்வர் மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும். கொடநாடு பணம் எல்லாம், பழனிசாமியிடம்தான் இருக்கிறது. எல்லோரையும் கட்சியை விட்டு நீக்கி விட்டு அவர் மட்டும்தான் இருக்க வேண்டுமென சர்வாதிகாரத்தனம் செய்கிறார் எனக்கூறி கதறினர். பின்னர் நிர்வாகிகள் கூறுகையில், தற்போதைய மாவட்ட செயலாளர் பசுபதி தன்னுடைய வார்டில் 52 வாக்குகள் மட்டுமே வாங்கியவர். ஆனால் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 30 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்துள்ளார். அவர் இல்லாமல் விழுப்புரம் மாவட்டத்தில் ஒன்றும் செய்ய முடியாது, என்றனர்.

* தன்னம்பிக்கை இல்லாதவர் இபிஎஸ்

ஜெ.வின் சமாதி மீது வைத்த ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது: எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பல்வேறு பொறுப்புகளில் அதிமுகவில் பணியாற்றி வந்திருக்கிறோம். கடந்த 34 ஆண்டு காலமாக இரவு பகல் பாராமல் உழைத்தோம். ஜெ.வின் மறைவுக்குப் பின் தமிழக முதலமைச்சராகவும், கட்சின் இணை ஒருங்கிணைப்பாளராகவும், பொதுச்செயலாளராகவும் அங்கீகரித்து துணை நின்றோம். கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2026 தேர்தல் ஆகிய அனைத்துத் தேர்தல்களிலும் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

இதைப்பற்றி ஆராயாமல், கட்சியை ஒரு கம்பெனியாக மாற்றி உங்களுக்கு ஜால்ரா அடிப்பவர்களை மாவட்ட செயலாளராக நியமனம் செய்துள்ளீர்கள். தலைவன் என்றால் முதலில் தன்னம்பிக்கை முக்கியம். தன்னம்பிக்கை இல்லாத ஒரு தலைவன் பின்னால் பயணிக்க முடியாத காரணத்தினால், நாங்கள் வகிக்கும் பொறுப்பில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்கிறோம். தொண்டர்களாக பயணிக்கிறோம். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

Related Stories: