மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவு: தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் ரீல்ஸ் எடுப்பதற்கு ஆய்வு என்ற பெயரிலே அடிக்கிற அட்ராசிட்டிகள், கூத்துகளால் தமிழகம் தலை தாழ்ந்து நிற்கிறது. அமைச்சர் ராஜ்மோகன் சமணர் படுகையில் போய் படுத்து ஆய்வு செய்துள்ளார். இந்தியாவிலேயே படுத்து ஆய்வு செய்த அமைச்சர் ராஜ்மோகன்தான். ஏனெனில், ரீல்ஸ்க்கு ஆய்வு செய்த இக்காட்சியை இதுவரை யாரும் பார்த்ததில்லை. தமிழர்களின் தாய் மடியான கீழடியிலே, அமைச்சர் ராஜ்மோகன் ஆய்வு செய்ததை ரீல்ஸ் போடுவதற்காக தவெகவினர் ட்ரோன் மூலம் வீடியோ எடுத்துள்ளதை, அமைச்சர் தடுக்கவில்லை.
ட்ரோன் பறக்க இங்கு தடையிருக்கிறது. தடை இருந்தும் தவெகவினரை யாரும் தடுக்கவில்லை. வெளிநாட்டிற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தொழில்துறை அமைச்சர் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டிலே சென்றார்களா? ரெகுலர் பாஸ்போர்ட்டிலே சென்றார்களா? எனும் சர்ச்சைக்கான விளக்கம் அரசு சார்பிலே வெளிவரவில்லை. அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு இப்படி அமைச்சர்கள் சென்று வருவது அப்பட்டமான விதிமீறல். ஒருபுறத்திலே அமைச்சர் போதை பொருள் பயன்படுத்துகிற சர்ச்சை, நாடெல்லாம் தவெகவினர் ரீல்ஸ் பயன்படுத்துவதிலே சர்ச்சை, பழனி கோயில் இடம் கொள்ளையடித்ததாக சர்ச்சை. இப்படி எந்த சர்ச்சைக்கும் முதல்வர் விஜய், விளக்கமோ, கருத்தோ அறிக்கையோ தருவதில்லை. இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
