எதிர்க்கட்சிகளின் குரலை பாஜக அரசு காது கொடுத்து கேட்பதில்லை… திருச்சி சிவா எம்.பி குற்றச்சாட்டு

டெல்லி: மேகதாது அணை விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக எம்.பி-க்கள் தொடர் முழக்கமிட்ட நிலையில், விவாதிக்க மறுப்பு தெரிவித்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மாநிலங்களவைக் குழுத்தலைவர் எம்.பி திருச்சி சிவா, மேகதாதுவில் அணை கட்டினால் எதிர்காலத்தில் தமிழ்நாடு பாலைவனமாகும் சூழல் உள்ளது. உச்சநீதிமன்றமும் நடுவர் நீதிமன்றமும் தமிழ்நாட்டுக்கு தர வேண்டும் எனக்கூறிய நீரைக்கூட, கர்நாடக அரசு சரிவர தருவதில்லை என்றார்.

மேகதாது அணை விவகாரம் குறித்து அவை நடவடிக்கையை ஒத்திவைத்து விரிவாக விவாதிக்க வேண்டும் என திமுக சார்பில் நோட்டீஸ் அளித்தோம். ஆனால் அது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை, விவாதிக்கவும் இல்லை. இன்று, வழக்கமான அலுவல் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க நாங்கள் நோட்டீஸ் அளித்துள்ளோம். இது விவசாயிகளுக்கான ஒரு அடையாள நடவடிக்கையாகும். மேகதாது அணை கட்டுமானம் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்றும், இது தொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நாங்கள் அனைவரும் குரல் எழுப்பி வருகிறோம். விதி 267-ன் கீழ் நான் அளித்த நோட்டீஸ் பரிசீலனைக்கே எடுத்துக்கொள்ளப்படவில்லை. இருப்பினும், போராட்டத்தின் அடையாளமாகவும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், இன்று திமுக உறுப்பினர்கள் பச்சை நிறத் துண்டை அணிந்திருந்தோம் என்றார்.

அதே நேரம் எந்த அறிவிப்பும் இல்லாமல் அவையை பலமுறை ஒத்திவைத்ததோடு, தற்போது நாள் முழுவதும் மாநிலங்களவையை ஒத்தி வைத்துள்ளனர் என்று திருச்சி சிவா கூறினார். சோனம் 20 நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்தார். இந்த அரசுக்குச் சிறிதும் அக்கறை இல்லை; மனிதாபிமான அணுகுமுறை கூட இல்லை. நீதிமன்றம் தலையிட்டுத்தான் அவரது உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்தளவுக்கு அவர்கள் பொறுப்பற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்றார். தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, எதிர்க்கட்சிகளின் குரலை பாஜக அரசு காது கொடுத்து கேட்பதில்லை, மக்களை மதிப்பதில்லை, எம்பி-க்களை மதிப்பதில்லை, போராட்டக்காரர்களையும் மதிப்பதில்லை என்று சாடினார்.

Related Stories: