×

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தி.நகர் சத்யாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது எப்படி? காரணத்தை தெரிவிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணனுக்கு (தி.நகர் சத்யா) எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது தொடர்பான காரணங்களை விளக்கி உத்தரவு பிறப்பிக்குமாறு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016-21ம் ஆண்டுகளில் தியாகராய நகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த அதிமுகவைச் சேர்ந்த சத்தியநாராயணன் வருமானத்துக்கு அதிகமாக 9 கோடியே 44 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், அவரது மனைவி ஜெயச்சித்ராவுக்கு எதிராகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறையினர் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், விசாரணைக்கு எடுத்துக் கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, சத்தியநாராயணன் மற்றும் அவரது மனைவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுவை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார். விசாரணையின் போது, குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் முன்பு தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அவகாசம் தராமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த உத்தரவில் எந்த காரணங்களும் தெரிவிக்காமல் இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று சத்தியநாராயணன் தரப்பில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை விசாரணைக்கு எடுத்து கடந்த பிப்ரவரி மாதம் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேசமயம், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டதற்கான காரணங்களை விளக்கி ஒரு வாரத்துக்குள் சிறப்பு நீதிமன்றம் புதிதாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : AIADMK ,T. Nagar Sathya ,HC ,Chennai ,Madras High Court ,
× RELATED 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி...