×

திருத்துறைப்பூண்டியில் கஜா புயலால் சேதமடைந்த அரசு கல்லூரியின் முதன்மை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்

*அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாணவர்கள் வலியுறுத்தல்

திருத்துறைப்பூண்டி : கஜா புயலால் சேதமடைந்த திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கடந்த 2011-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரி எனும் பெயரில் திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் தற்காலிகமாக பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், பி.காம்., பி.பி.ஏ. ஆகிய பாடப்பிரிவுகளுடன் துவங்கப்பட்டது. அதன் பின்பு பி.எஸ்.டபிள்யூ மற்றும் முதுகலை தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகள் துவங்கப்பட்டன.

இந்நிலையில் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் கோரி மாணவ அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் போராட்டத்தின் விளைவாக திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளூர் ஊராட்சி தண்டலைச்சேரி எனும் கிராமத்தில் நீநெரினாதர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான 10.2 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டும், கட்டிடம் கட்டுவதற்கு 7.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் கல்லூரி கட்டிடம் அடிக்கல் நாடு விழா 30.11.2015 அன்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் முடிவடைந்து 05.04.2018 கல்லூரி புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்று கல்லூரி நடைபெற்று வருகிறது.

கல்லூரி திறக்கப்பட்டு ஐந்து மாதங்களுக்குள்ளாகவே இயற்கை பேரிடரான கஜா புயல் வீசியதில் கல்லூரி முற்றிலும் சேதமடைந்தது. அதன்பிறகு இக்கல்லூரி புயல் நிவாரண மையமாகவும் செயல்பட தொடங்கியது. கட்டிட சேதங்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்து சென்றார்கள், மாநில அமைச்சர்கள் கல்லூரிக்கு வந்து செல்கிறார்கள் சேதங்கள் மட்டும் சரி செய்யப்படவில்லை.

இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரி கல்லூரியாக செயல்பட்டு வந்த இக்கல்லூரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது. 2024-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கல்லூரி ஆய்வுக்கு வந்த போது கல்லூரியின் நிலையை பார்த்து விட்டு, உடன் அவரது பரிந்துரையின் பேரில் கல்லூரியின் முன்பக்கம் மட்டும் சேதமடைந்த கண்ணாடிகளை புதிதாக மாற்றியும், பெயிண்ட் அடிக்கும் பனி ONGC நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது. மீதம் உள்ள மூன்று பக்க சுவர்களில் உள்ள சேதங்கள் இன்று வரை சரி செய்யப்படாமல் உள்ளது.

தற்போது இக்கல்லூரியில் மாணவர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள், இணைய வசதிகள், மாணவர்கள் ஒழுக்கம், கட்டுப்பாடுடன் கல்லூரி தனியார் கல்லூரிக்கு இணையாக செயல்படுவது சிறப்புக்குரியது.. பாராட்டுக்குரியது.. இப்பணிகளை அர்ப்பணிப்புடன் செய்து வரும் தற்போதைய முதல்வர் மாறனுக்கு இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் 8 வருடங்களாக மூன்று பக்க சுவர்களில் சிமெண்ட் பூச்சுகள் மற்றும் சுவரில் உள்ள சிமெண்ட் கற்கள் பெயர்ந்து விழுவது போன்றவற்றை பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் கல்லூரிக்கு வரும் அமைச்சர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளை பார்வையிட்டு சேதங்களுக்கான திட்ட மதிப்பீட்டினை தயார் செய்து சீரைமைக்க வேண்டியது தங்களது பணியாக இருக்க வேண்டுமே தவிர, நிதி இல்லை வந்தால் செய்கிறோம் என சொல்வது மாணவர்களின் எதி காலத்தை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.

இக்கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர் பெரும்பாலானோர் ஏழை எளிய விவசாயத்தை பின்புலமாக கொண்டவர்களின் பிள்ளைகளாவர். எனவே ஏதும் அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு முற்றிலும் பெயர்ந்து கொட்டியுள்ள சுவர்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் மற்றும் சிமெண்ட் கற்கள், ஜன்னல்கள் ஆகியவற்றை சீரமைத்து பெயிண்ட் அடித்து மாணவர்கள் பாதுகாப்புடன் நல்ல சூழ்நிலையில் உயர்கல்வி பயின்றிட தமிழ்நாடு அரசும், அமைச்சர்களும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பார்களா என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து எதிர்பார்ப்போடு உள்ளனர்.

Tags : Government College ,Gaja ,Thiruthurapundi ,State College of Arts and Sciences ,Thiruvarur District ,Thiruthurapundi Govt ,
× RELATED குள்ளப்பகவுண்டன்பட்டி நீர்மின்...