×

குன்னூரில் குடிநீர் லைன்மேன் மீது தாக்குதல் இந்து முன்னணி செயலாளர் தலைமறைவு

*நகராட்சி ஊழியர்கள் போராட்டம்

குன்னூர் : குன்னூரில் குடிநீர் லைன்மேன் மீது தாக்குதல் நடத்திய இந்து முன்னணி மாவட்ட செயலாளரை கண்டித்து நகராட்சி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் குடிநீர் வழங்கல் துறையில் கடந்த 18 ஆண்டுகளாக குடிநீர் லைன்மேனாக சார்லஸ் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த 18ம் தேதி அன்று இரவு, குன்னூர் பகுதியில் வசிக்கும் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஹரிஹரன் என்பவர், தனது வீட்டிற்கு குடிநீர் வரவில்லை எனக் கூறி சார்லஸின் வீட்டிற்குள் புகுந்து அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாகச் சென்று சண்டையை தடுத்து நிறுத்தி சார்லஸை மீட்டனர். இதுகுறித்து நேற்று முன்தினம் நகராட்சி ஊழியர்கள், குன்னூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார், ஹரிஹரன் மீது வழக்கு பதிந்து, அவரை தேடி வருகின்றனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த சார்லஸ், தற்போது குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவத்தைக் கண்டித்தும், தலைமறைவாக உள்ள ஹரிஹரனை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், நகராட்சி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கோரியும் நகராட்சி ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குன்னூர் நகராட்சி அலுவலகத்தின் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Hindu Munnani ,Coonoor ,Hindu Munnani District ,Nilgiris ,Coonoor Municipality ,
× RELATED சீர்காழியில் முதியவரை ஈவு...