×

குள்ளப்பகவுண்டன்பட்டி நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சீரமைப்பு பணிகள் அனைத்தும் மந்தம்

*தொடர்ந்து மின் உற்பத்தி பாதிப்பு

கூடலூர் : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மந்தகதியில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி நள்ளிரவில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதியில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் வெள்ளநீர் புகுந்து பாதிக்கப்பட்டன.

குறிப்பாக கூடலூர் அருகே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த நீர் மின் உற்பத்தி நிலையத்தின் தடுப்பணை உடைந்ததோடு, மழை வெள்ளம் நிலையத்திற்குள் புகுந்து மின் உற்பத்திக்கான இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் உபகரணங்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டு, அன்று முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மின் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி கடந்த 9 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் மின் உற்பத்தி நிலையம் மற்றும் தடுப்பணையை சீரமைக்கும் பணி மந்தமாக நடைபெறுவதால் முழுமையாக சீரமைக்க இன்னும் காலதாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இம்மின் உற்பத்தி நிலையத்தில் இருந்த இரண்டு ஜெனரேட்டர்கள் மூலம் நடைபெற்று வந்த தலா ஒன்றரை மெகாவாட் என மொத்தம் மூன்று மெக்கா வாட் மின் உற்பத்தி தொடர்ந்து தடைபட்டுள்ளது.

மேலும், கூடலூர் அருகே லோயர் கேம்பில் உள்ள நீர் மின் உற்பத்தி நிலையத்தில் பெரியாறு அணை தண்ணீர் மூலம் நான்கு ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 மெகாவாட் வீதம் 168 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பப்படு வந்த நிலையில், தொடர்ந்து பெரியாறு அணையிலிருந்து குறைந்த அளவு (256 கன அடி) நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருவதால் 24 மெகா வாட் மின் உற்பத்தி மட்டுமே நடைபெற்று வருகிறது.

இது மட்டுமன்றி கூடலூர் அருகே குருவனூத்து ஆற்றுப்பாலம், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, மூன்று இடங்களில் சிறிய அளவிலான பெரியாறு – வைகை சிறு புனல் நீர் மின் உற்பத்தி நிலையங்களில் பெரியாற்றில் நீர்வரத்து தொடர்ந்து 400 கன அடிக்கு கீழ் மட்டுமே வருவதால், குருவனூத்து காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு ஆகிய இடங்களில் 2 ஜெனரேட்டர்கள் மூலம்
6 மெகாவாட் மின் மின் உற்பத்தியும் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளது.

குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் இந்நிலையில் கடந்த அக்.17ம் தேதி நள்ளிரவு பெய்த கனமழையினால் குள்ளப்பகவுண்டன்பட்டியில் பெரியாற்றில் கட்டப்பட்டிருந்த தடுப்பணை உடைந்து சிறு புனல் மின் உற்பத்தி நிலைத்திற்குள் வெள்ள நீர் புகுந்து பாதிக்கப்பட்ட இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் மற்றும் மின் உபகரணங்கள் பாதிக்கப்பட்டு தடுப்பணை சீரமைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இங்கும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு அதிகப்படியான தண்ணீர் திறப்பிற்கு முன்னதாக குள்ளப்பகவுண்டன்பட்டியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மின் நிலையத்தை சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து சீரமைத்து மின் உற்பத்தியை மீண்டும் துவங்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்து வருகிறது.

Tags : Ghulapakoundanpathi ,Koodalur ,Theni District ,
× RELATED பொள்ளாச்சியில் நீர்வளத்துறையில் அறிவிக்கப்பட்ட 22 டெண்டர்கள் ரத்து