விழுப்புரம்: பழநி கோயிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி நில மோசடி தொடர்பாக விழுப்புரம் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் பல மணி நேரம் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், நீதிமன்ற உத்தரவுகளை மீறி போலி ஆவணங்கள் மூலம் வெறும் 2 கோடி ரூபாய்க்கு பதிவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக, பழநி கோயில் நிலங்கள் பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம் அளித்த புகாரின் பேரில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் மீது கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் சொத்து மற்றும் அரசு அதிகாரிகள் தொடர்புடைய விவகாரம் என்பதால், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டது. இதையடுத்து, டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையிலான சிபிசிஐடி குழுவினர் பழநியில் கள ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, பழநி அறநிலையத்துறையைச் சேர்ந்த முருகானந்தம், செயல் அலுவலர் கணபதி, ஆய்வாளர் சிவனேசன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சிபிசிஐடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஜிதா நேரில் விசாரணை நடத்தினார். இதனிடையே நிலமோசடி தொடர்பாக யார் விற்பனையில் ஈடுபட்டது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம் என்ஜிஜிஓ காலனி காமராஜர் நகர் பகுதியில் வசிக்கும் முருகதாஸ் என்பவர் திருவெண்ணைநல்லூர் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
பழநி கோயில் நில மோசடி தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டப்பட்டிருந்ததால், பூட்டை உடைத்து போலீசார் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். பல மணி நேர சோதனைக்கு பிறகு அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனை தொடர்ந்து அவரது வீட்டிற்கு நேற்று காலை சிபிசிஐடி போலீசார் சீல் வைத்தனர்.
பின்னர் வீட்டில் ஆள் இல்லாத நிலையில் முருகதாசுக்கு சம்மன் அனுப்பி காவல் நிலையத்தில் நேரில் அழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். பழனி கோயில் நில மோசடி தொடர்பாக விழுப்புரம் ஆசிரியர் வீட்டில் சோதனை நடத்தி, வீட்டுக்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் 2வது நாளாக விசாரணை: பழநி முருகன் கோயிலுக்கு சொந்தமான நிலம் மோசடி விற்பனையில் நெல்லையை சேர்ந்த சிலருக்கு தொடர்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து பாளையங்கோட்டை வி.எம். சத்திரத்தைச் சேர்ந்த குமரகுருபரன் (46), நெல்லை டவுன் சாலியர் தெருவைச் சேர்ந்த டெக்கரேஷன் தொழில் செய்து வரும் சண்முகசுந்தரம் (43) மற்றும் நெல்லை டவுன் சம்பந்தர் தெருவைச் சேர்ந்த சிவகுமார் (41) ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார் மூன்று குழுக்களாக பிரிந்து அவர்களிடம் நேற்று முன்தினம் தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது கிஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த விசாரணை முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூன்று பேரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அசையும், அசையா சொத்துக்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் நேற்று 2வது நாளாக தீவிர விசாரணை நடத்தினர். இன்று அவர்களுடைய வங்கி கையிருப்பு, லாக்கர்களை திறந்து சோதனை நடத்தவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
* சமூக வலைதளங்களில் உலா வரும் பத்திர ஆவணம்
பழநி தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளை சார்பில் ரூ.2 கோடிக்கு 1.40 ஏக்கர் நிலத்தை சேதுபதி மற்றும் வெள்ளத்துரை ஆகியோருக்கு பதிவு செய்து கொடுத்த பத்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வரைலாகி வருகிறது. இந்த பத்திரம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த முத்திரைத்தாள் விற்பனையாளர் ராஜேஸ்வரி என்பவரிடமிருந்து கடந்த மார்ச் 27ம் தேதி வாங்கப்பட்டுள்ளது. பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை வாங்கி உள்ளார். 72 தாள்களை கொண்ட பத்திரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், முதல் 5 பக்கங்கள் மட்டுமே சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
* அதிகாரிகள் ‘ஆசியோடு’ அரசு மதிப்பீட்டை விட குறைந்த விலையில் பதிவு
பொதுவாக, பத்திரப்பதிவிற்கான அரசு கட்டணம் அதன் அரசு மதிப்பீட்டில் 11 சதவீதம் ஆகும். சம்பந்தப்பட்ட இடம் பழநி நகர எல்லைக்குள் உள்ளது. தற்போது அரசு மதிப்பீடு இப்பகுதியில் சதுர அடிக்கு சுமார் ரூ.1,750 ஆக உள்ளது. இதன்படி 1.40 ஏக்கருக்கு சுமார் ரூ.11 கோடிக்கு மேல் அரசு மதிப்பீடு இருக்கும். ஆனால், இடத்தை விவசாய நிலமாக குறிப்பிட்டு ரூ.2 கோடி மதிப்பீட்டில் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
இதன்மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்ய மதிப்பீடு செய்ததிலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பத்திரம் கிரையம் செய்ய வழங்கப்பட்ட காசோலைகள் செல்லுபடியாகவில்லை. அதிகாரிகள் இவ்விஷயங்களில் எந்த கவனமும் கொள்ளவில்லை. இதன்மூலம் பத்திரப்பதிவு விவகாரத்தில் அதிகாரிகள் உடந்தை என்பது உறுதியாகிறது. சிபிசிஐடி போலீசார் சார்பதிவாளர் மற்றும் மாவட்ட பதிவாளரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே முறைகேடு பத்திரப்பதிவிற்கு காரணமான விவிஜபிக்களின் அடையாளம் தெரியுமென பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
* நிலத்தின் ஆவணங்கள் சேகரிப்பு
ரூ.100 கோடி நில முறைகேடு தொடர்பாக, 4வது நாளான நேற்று சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சந்தானலட்சுமி தலைமையில் 5க்கும் மேற்பட்ட போலீசார் பழநி தாலுகா அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். வருவாய்த்துறை மற்றும் சர்வேயர் பிரிவு அதிகாரிகளிடம் பிரச்னைக்குரிய இடத்தின் அரசு வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை சேகரித்தனர். தொடர்ந்து இடத்தின் மீதான வரி வசூலிப்புகள், ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்ய யாரும் விண்ணப்பத்திருந்தனரா, இடத்தின் ஆவணங்களை வேறு யாரும் பெற்றுச் சென்றனரா என்பது குறித்தும் விசாரித்தனர். சுமார் 2 மணி நேர விசாரணைக்குப்பின், சில ஆவணங்களுடன் அவர்கள் திரும்பிச் சென்றனர்.
* பதிவுத்துறை அதிகாரிகள் குழு இன்று விசாரணை
பழநி கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு செய்தது தொடர்பாக முழுமையாக ஆய்வு செய்த உண்மை நிலையை அறிய கூடுதல் பதிவுத்தலைவர், உதவி பதிவுத்தலைவர், மாவட்ட பதிவாளர் அடங்கிய விசாரணைக்குழு பத்திரப்பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பத்திரப்பதிவு நாளில் சார்பதிவாளர் அலுவலக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும். மேலும், பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், உதவியாளர், சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாவட்ட பதிவாளரிடமும் இக்குழு இன்று விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
