பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தல்

ராமநாதபுரம்: தமிழக அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ராதிகா தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி மறுவரையறை காரணமாக பெண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை எந்தப் பாகுபாடும் இன்றி முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன், ராமநாதபுரத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இல்லாத மதச்சார்பற்ற கட்சித் தலைவர்களைச் சந்தித்து, பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருவதாகவும் ராதிகா தெரிவித்தார்.

குறிப்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் கனிமொழி கருணாநிதி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பிரேமலதா விஜயகாந்த், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச் செயலாளர்கள் மற்றும் இடதுசாரி கட்சித் தலைவர்களைச் சந்தித்து இந்தக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாக கூறினார்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை இந்த முறை நிச்சயமாக அமல்படுத்த வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். இந்தப் போராட்டத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்று அவர் தெரிவித்தார்.

Related Stories: