ரூ.10 ஆயிரம் லஞ்சம் கொடுக்க மறுத்த பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய தெலுங்கு தேசம் செயலாளர் கைது: குண்டூர் அருகே பரபரப்பு

திருமலை: ஆந்திர மாநிலம், குண்டூர் கிருஷ்ணபாபு காலனியை சேர்ந்த ஒரு பெண், கடந்த 15ம் தேதி இரவு தனது வீட்டின் முன் உள்ள குடிநீர் குழாயை சரி செய்து கொண்டு இருந்தார். அந்த பணியை செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த நாகரம்பாளையம் பகுதியின் 21வது மண்டல தெலுங்கு தேசம் கட்சி செயலாளர் மல்லேலா வெங்கடரமண மூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோட்டாரை அகற்றுமாறு கூறினர்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு மல்லேலா வெங்கடரமண மூர்த்தி பெண்ணை கைகளால் சரமாரியாக தாக்கினாராம். இதைப்பார்த்த மூர்த்தியின் சகோதரியும் திருநங்கையான மாதவி, அந்தப்பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த ஆடைகளை கிழித்தெறிந்து நிர்வாணமாக்கினார். இதையடுத்து அந்த பெண் தன்னை விட்டு விடும்படி அவர்களிடம் கெஞ்சினார்.

இதைப்பார்த்த அப்பகுதியினர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு துணிகள் கொடுத்து மூர்த்தி மற்றும் மாதவியிடம் இருந்து பெண்ணை மீட்டனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கடந்த 16ம் தேதி நாகரம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா வழக்குப்பதிவு செய்து, முர்த்தி, மாதவி மற்றும் அவரது குடும்பத்தினர் 9 ேபரை கைது செய்தனர்.

மேலும் பிஎன்எஸ் சட்டப்பிரிவுகள் 331 (6), 74, 79, 115 (2) மற்றும் 118 (1) ஆகியவற்றுடன் 3 (5)-ஐ இணைத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையில், குண்டூரில் நிகழ்ந்த சம்பவம் குறித்து தான் கடுமையான மனவேதனை அடைந்துள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்த நிலையில் கட்சி நிர்வாகி மல்லேலா வெங்கடரமண மூர்த்தியை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இடைநீக்கம் செய்ய அமைச்சர் நாரா லோகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: