புதுடெல்லி: நாடு முழுவதும் வாக்காளர் தீவிர திருத்த பட்டியல் பணிகள் மூன்றாம் கட்டமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், எஸ்.ஐ.ஆர் மூலம் வாக்காளர்கள் பெரிய அளவில் நீக்கப்பட்டு வருகின்றனர், தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கிட்டத்தட்ட 33 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர். எஸ்.ஐ.ஆர் பணியின் போது சந்தேக வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன. அவர்களுக்கு அரசின் சமூகநலத்திட்ட பலன்கள் மறுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. இதுபோன்ற நிலையில் மேற்கு வங்கத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையின் போது, லட்சக்கணக்கான மக்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அவ்வாறு பெயர் நீக்கப்பட்டவர்களுக்குப் பொது விநியோகத் திட்டம், ‘அன்னபூர்ணா யோஜனா’ போன்ற சமூகநல திட்டங்களின் பலன்கள் மற்றும் சாதிச் சான்றிதழ்கள் மறுக்கப்படுவதாகக் கூறி, காங்கிரஸ் பிரமுகர் பிரசென்ஜித் போஸ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கர் நாராயணன்,\\” மேற்கு வங்கத்தில் மட்டும் சுமார் 34 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் சிறப்பு தீர்ப்பாயங்களில் நிலுவையில் உள்ளன. இதுவரை வெறும் 38ஆயிரம் மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், விசாரிக்கப்பட்ட மனுக்களில் 70சதவீதம் பேரின் பெயர்கள் தவறாக நீக்கப்பட்டது தெரியவந்து, அவை மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, முறையான விசாரணை முடியும் முன்பே ஏழை எளிய மக்களின் ரேஷன் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைப் பறிப்பது சட்டவிரோதமானது ஆகும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘வாக்காளர் பட்டியலை சரிபார்க்கவும், சந்தேகத்திற்குரிய நபர்களின் பெயர்களை நீக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால், ஒரு நபர் இந்தியக் குடிமகனா இல்லையா என்பதை இறுதி செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது. குடியுரிமை சட்டத்தின்படி அதனைத் தீர்மானிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு மட்டுமே உள்ளது. வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்ட உடனே ஒருவரது குடியுரிமை தானாகவே கண்டிப்பாக ரத்தாகி விடாது. தேர்தல் ஆணையம் ஒருவரது குடியுரிமை குறித்து சந்தேகம் கொண்டால், அந்த விவகாரத்தை உரிய விசாரணைக்காக ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்குத்தான் பரிந்துரைக்க வேண்டும். எனவே ஒன்றிய அரசு இந்த விவகாரத்தில் இறுதி முடிவை அறிவிக்கும் வரையில், வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்பட்ட நபர்களுக்கான சமூக நலத்திட்ட உதவிகளையும், இதர சிவில் உரிமைகளையும் மாநில அரசுகள் நிறுத்த கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள்,‘‘இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்குமாறு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும். மேற்குவங்க அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
