நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரையொட்டி அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்பு: வாங்சுக், ராமர் கோயில் உள்ளிட்ட முக்கிய பிரச்னை குறித்து விவாதம்

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்க உள்ளது. நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி 21வது நாளாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் நேற்று ஜந்தர் மந்தரில் இருந்து வலுக்கட்டாயமாக போலீசாரால் அப்புறப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக கரப்பான் பூச்சி கட்சி நாடாளுமன்றம் நோக்கி நாளை பேரணி நடத்துவதாக அறிவித்திருந்த நிலையில் வாங்சுக் அப்புறப்படுத்தப்பட்டுள்ளார்.

இதுதவிர, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. இந்த பிரச்னைகளை அவையில் எழுப்பி அரசுக்கு நெருக்கடி தர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் அவையில் அனல் தெறிக்கும் விவாதங்கள் நடக்கும். எனவே அவையை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளின் ஆதரவு கோரியும், அவையில் விவாதத்திற்கு ஏற்கப்படும் விவகாரங்கள், தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் குறித்து தெரிவிக்கவும் ஒன்றிய அரசு இன்று அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இக்கூட்டத்தில் முக்கிய கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் பங்கேற்பார்கள். இதில், அயோத்தி, வாங்சுக் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அயோத்தி ராமர் கோயில் விவகாரம் முக்கிய பங்கு வகிக்கும். இவ்விவகாரம் தொடர்பாக அவை நடவடிக்கைகளுக்கு தடையை ஏற்படுத்தப் போவதாக சமாஜ்வாடி கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளது.

இதற்கு நடுவே பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ள ஒன்றிய அரசு, 5 புதிய மசோதாக்களையும் தாக்கல் செய்ய உள்ளது. வந்தே மாதரம் பாடல் பாடும் போது இடையூறு விளைவிப்பவர்களுக்கு தண்டனை விதிக்கும் வகையில் தேசிய கவுரவ அவமதிப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. வருமான வரி திருத்த மசோதா, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு திருத்த மசோதா, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை திருத்த மசோதா, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு திருத்த மசோதா உள்ளிட்டவை அறிமுகம் செய்யப்பட உள்ளன.

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்குள்ளான, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த மசோதா முந்தைய கூட்டத்தொடரில் முடக்கப்பட்ட நிலையில் தற்போது நிறைவேற்றுவதற்காக பட்டியலிடப்பட்டுள்ளது. அதே சமயம், பல்கலைக்கழக மானிய குழுவுக்கு மாற்றாக தேசிய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரும் விக்சித் பாரத் சிக்ஷா அதிஸ்தான் மசோதா மற்றும் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி 30 நாள் சிறை தண்டனை பெற்றால் அவர்களின் பதவியை பறிக்கும் 130வது அரசியலமைப்பு திருத்த மசோதா ஆகிய இரண்டனையும் கடைசி நேரத்தில் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு நீக்கி உள்ளது. சமீபத்தில் தொகுதி மறுவரையுடன் கூடிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கான அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றுவதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்தததைத் தொடர்ந்து 130வது அரசியலமைப்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்யாமல் பின்வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிவசேனா, திரிணாமுல் அதிருப்தி எம்பிக்களின் கோரிக்கைகள் ஏற்பு
சிவசேனா (உத்தவ்) கட்சியிலிருந்து 6 அதிருப்தி எம்பிக்களும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 20 அதிருப்தி எம்பிக்களும் சமீபத்தில் கட்சி தலைமைக்கு எதிராக மாறினர். இந்நிலையில், சிவசேனா உத்தவ் அணியின் 6 அதிருப்தி எம்பிக்கள் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைவதற்கும், திரிணாமுலின் 20 எம்பிக்கள் தொடங்கிய என்சிபிஐ என்ற கட்சியை சேர்ந்தவர்கள் தனி இருக்கை வழங்கக் கோரியும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களின் கோரிக்கையை ஓம் பிர்லா நேற்று ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்பிக்களின் பலம் 13 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: