திருவனந்தபுரம்: கேரளத்தில் கடும் மின் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக மாநிலம் முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. தினமும் பகலிலும், இரவிலும் 2 மணிநேரத்திற்கு மேல் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. மின்வெட்டை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
இதைத்தொடர்ந்து மின் தட்டுப்பாட்டை சமாளிக்க பல்வேறு நிறுவனங்களில் இருந்து மின்சாரம் வாங்க கேரள மின்வாரியம் தீர்மானித்துள்ளது. தேசிய அனல் மின் உற்பத்தி நிறுவனம் உள்பட 3 நிறுவனங்களில் இருந்து 1 வருடத்திற்கு 200 மெகாவாட் மின்சாரம் வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யூனிட்டுக்கு ரூ.5.96 விலையில் 140 கோடி யூனிட் மின்சாரம் இந்த நிறுவனங்களில் இருந்து வாங்கப்படுகிறது. இதற்கு ரூ. 840 கோடி செலவாகும். இதற்காக 1 வருடத்திற்கு இந்த நிறுவனங்களுடன் கேரள மின்வாரியம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
