சென்னை: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தங்கும் விடுதிகளின் அறைக் கட்டணங்கள் நேற்று (ஜூலை 13) முதல் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு நிர்வாகம் மற்றும் பராமரிப்புச் செலவுகளைக் காரணம் காட்டி இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது
இந்நிலையில் இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என அமமுக-வின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் தமிழகத்தின் முக்கிய ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள விடுதிகளின் கட்டணம் 600 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொலைதூரங்களில் இருந்து பழனி முருகனை தரிசிக்க வரும் ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தினர் குறைந்த செலவிலும், பாதுகாப்பாக தங்குவதற்காகவும், கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்ட விடுதிகளின் கட்டணத்தை தனியார் விடுதிகளுக்கு இணையாக திடீரென பெருமளவு உயர்த்தப்பட்டிருப்பது அவ்விடுதிகள் கட்டப்பட்ட அடிப்படை நோக்கத்தையே அடியோடு சிதைக்கும் வகையில் உள்ளது.
எனவே, பழனி கோயிலுக்கு வரும் பக்தர்களை வருவாய் ஈட்டும் கருவியாக பார்க்காமல், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விடுதி கட்டணங்களின் உயர்வை உடனடியாக திரும்ப பெறுவதோடு, பக்தர்களுக்கு சிரமத்தை உண்டாக்கும் எத்தகைய முடிவுகளையும் இதுபோன்று அவசரகதியில் எடுக்கக் கூடாது என இந்து சமய அறநிலையத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டு உள்ளார்.
