மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தில் நேற்று நடந்த அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பேசியதாவது: புதியதொரு அத்தியாயத்தை தவெகவில் தொடங்கியுள்ளனர். அனைத்துக் கட்சியிலும் இருக்கும் கட்டமைப்பை தவெக கொண்டு வர நிச்சயம் ஆயிரம் ஆண்டுகளாகும். இதைத்தெரிந்தே, பிற கட்சியின் கட்டமைப்பை ஆட்டையைப் போடுவது தான் முதல்வர் விஜய்யின் களவாணித்தனம். அதிமுக ஆட்சி அமைக்காதது கூட கவலையில்லை. ஆனால் எம்எல்ஏக்கள் விலை போவது தான் வேதனையாக இருக்கிறது. 107 எம்எல்ஏக்களின் முகத்தை பார்த்து அவர்களின் பெயரை, விஜய் சரியாக உச்சரித்துவிட்டால் பொது வாழ்க்கையில் இருந்தே நான் விலகிக் கொள்கிறேன்.
மதுரையின் அமைச்சரே… வரலாறு என்ன மறந்து போய்விட்டதா?. எனது வீட்டிலும், அமைச்சர்களாக இருந்தவர்கள் வீட்டிலும் எத்தனை முறை நின்றிருப்போம் என்பதை மறந்து விட்டாரா? அதிமுகவை விட்டு ஓடிய ஓடுகாலிகளுக்கு அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. எடப்பாடி பழனிசாமியின் காலைப்பிடித்து, கையைப் பிடித்து காரியம் சாதித்தவர்கள் தான் இன்று ஓடிப் போய்விட்டார்கள். அங்கே போய் நீங்கள் டயரைத் துடைத்து விடுங்கள். டயரை நக்கக் கூடச் செய்யுங்கள். ஆனால், அங்கே போன பிறகு அதிமுகவினர் குறித்து நீங்கள் பேசக்கூடாது.
ஜென்சி தலைமையிலான இளைஞர்களை மூளைச்சலவை செய்ததாலேயே தவெக ஆட்சி அமைத்திருக்கிறது. மாலை 6 மணிக்கு மேல் ஆண்டவனே நினைத்தாலும் வெளியில் முதல்வரை அழைத்து வர முடியாது. சனி, ஞாயிறு விடுமுறை எடுக்கிறவர்தான் முதலமைச்சர். அவர் கொடுத்த வாக்குறுதிகளுக்கு பதில் கூறத் தயாராக இல்லை. தூர்ந்து போன சக்தி என்று கூறும் விஜய்யே, உங்களுக்கு ஒரு சவால். அதிமுக தூர்ந்து போன சக்தி என்று பேரை சொல்லக்கூடிய சக்தி உங்களுக்கு இருக்கிறதா? அவர் சொல்ல மாட்டார். ஏனென்றால் அதிமுகவினரை தானே அவர் அழைத்துக் கொண்டிருக்கிறார்.
ஒரே ஒரு அமமுக எம்எல்ஏவையும் தவெகவினர் கடத்திச் சென்று விட்டனர். ஒரே நாடு ஒரே தேர்தல் வரக்கூடும். மூன்று மாதங்கள் அல்லது மூன்று ஆண்டுகளில் கூட விஜய் ஆட்சி மாறும். கரூரில் கணக்கு பாக்கி இருக்கிறது என வளர்ந்த மாடு ஒருவன் பேசுகிறான். லாட்டரி சீட்டு விற்கிறவரெல்லாம் வந்தால் இப்படித்தான். கண்டனம் எழுந்ததால் தற்போது அமைதியாகி இருக்கிறார். இவ்வாறு பேசினார்.
