கட்டாயமாக பணம் பறிக்கும் மோசடி கூடாரமாக மாறிவிட்ட கல்வி முறை – ராகுல் காந்தி சாடல்

டெல்லி: நம் நாட்டின் கல்வி அமைப்பு தற்போது நேர்மையற்ற மற்றும்பணம் பறிக்கும் இயந்திரமாக மாறிவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தற்போதைய கல்வி அமைப்பு பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் ராகுல் காந்தி, குழந்தைகளை எதிர்காலத்திற்குத் தயார்படுத்த வேண்டிய கல்வி முறை, தற்போது மாணவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் கடன், மன அழுத்தம் மற்றும் விரக்தியை நோக்கி தள்ளுகிறது என்று சாடி உள்ளார்.

ஊழல் மலிந்த, அநீதியான, பாரபட்சமான, நேர்மையற்ற என்ற இந்த நான்கு சொற்களும் என்னுடையவை அல்ல; இந்தியாவின் கல்வி முறையை விவரிக்க இன்று நம் மாணவர்கள் பயன்படுத்தும் சொற்கள் இவை என்று குறிப்பிட்டு உள்ளார். உண்மை என்னவென்றால், நம் கல்வி முறை இப்போது கட்டாயமாக பணம் பறிக்கும் மோசடி கூடாரமாக மாறிவிட்டது.

இது சார்ந்த ஊழல்தான் ‘வினாத்தாள் கசிவு மாஃபியா’வை உருவாக்கியுள்ளது; லட்சியம் கொண்ட லட்சக்கணக்கான மாணவர்களின் பல ஆண்டுகாலக் கடின உழைப்பை ஒரே நொடியில் பறித்துச் செல்லும் கும்பல் இது. இங்கே, தவறு செய்தவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்பந்தங்களும், பதவி உயர்வுகளும் பரிசாக வழங்கப்படுகின்றன. ஆனால் தண்டனையை எதிர்கொள்பவர்கள் யார்? சிதைந்துபோன கனவுகளுடன் தனியாகப் போராட விடப்படும் மாணவர்களே.. போதும்… இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது; கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் ஜூலை 17-ல் டேராடூனில் என்னுடன் இணையுங்கள்; நாம் ஒன்றிணைந்து ‘மாணவர்களின் குரலை’ ஓங்கி ஒலிப்போம் என்று ராகுல் காந்தி அழைப்பு விடுத்து உள்ளார்.

Related Stories: