மும்பை: வியட்நாம் படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களின் உடல்கள் விமானம் மூலம் நேற்று மும்பை வந்து சேர்ந்தது. இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்கள் மும்பையில் இருந்து தனி விமானம் சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வியட்நாமின் பூ குவாக் தீவில் அருகே 36 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேக படகு, திடீர் அலையில் சிக்கி கடலில் கவிழ்ந்தது. இதில், 2 பெண்கள் உட்பட1 5 பேர் பலியாகினர். பலியானவர்களில் 10 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், 3 பேர் ஆந்திரா மற்றும் 2 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலியானவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், படகு விபத்தில் பலியான 15 பேரின் உடல்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் நேற்று தெரிவித்தது. தூதரகம் சார்பில் சமூக ஊடகத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘படகு விபத்தில் பலியான 15 இந்தியர்களின் உடல்கள் விஎன்979 என்ற வியட்நாம் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஹோ சி மின் நகரில் இருந்து மும்பைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த விமானம், ஹோ சி மின் நகரில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மும்பை விமான நிலையத்தை இரவு 9.35 மணிக்கு சென்றடையும். இது தொடர்பாக அந்தந்த மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்களைப் பெற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் இருப்பிடங்களுக்குக் கொண்டு சேர்க்க தேவையான உதவிகளை செய்யுமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஹனோயில் உள்ள இந்திய தூதரகமும், ஹோ சி மின் நகரில் உள்ள தூதரகமும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருக்கிறது’’ என கூறப்பட்டது. இதன்படி நேற்று இரவு 15 இந்தியர்களின் உடல்கள் மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன. அவை அந்தந்த மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேரின் உடல்கள் தனி விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வர தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்தது. சென்னை கொண்டு வரப்பட்டதும், சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்குப் பிறகு உடல்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.
